கோபா அமெரிக்கா கால்பந்து போட்டியின் இறுதி ஆட்டத்தில் அர்ஜென்டீனா 1-0 என்ற கோல் கணக்கில், நடப்புச் சாம்பியனாக இருந்த பிரேஸிலை வீழ்த்தி புதிய சாம்பியன் ஆனது.
இப்போட்டியில் அர்ஜென்டீனா 15-ஆவது முறையாக சாம்பியன் ஆகியுள்ளது. எனினும், கடந்த 1993-ஆம் ஆண்டுக்குப் பிறகு அந்த அணி கால்பந்து போட்டியில் வெல்லும் முதல் பட்டம் இதுவாகும். அந்த ஆண்டில் கோபா அமெரிக்கா மற்றும் இன்டர்கான்டினென்டல் கோப்பை ஆகிய போட்டிகளில் அர்ஜென்டீனா சாம்பியன் ஆகியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது
கோபா அமெரிக்கா போட்டியின் இந்த சீசனில் சிறந்த வீரராகளாக லயோனல் மெஸ்ஸி, நெய்மர் ஆகிய இருவருமே தேர்வு செய்யப்பட்டுள்ளனர். இதற்கான அறிவிப்பை அவர்கள் மோதிய இறுதி ஆட்டம் நடைபெறுவதற்கு முன்னதாக வெளியிட்ட போட்டி நிர்வாகம், ’இப்போட்டியில் இரு சிறந்த வீரர்கள் இடம் பெற்றிருந்ததால் ஒருவரை மட்டும் தேர்வு செய்ய இயலவில்லை என்று கூறியுள்ளது.