கல்லூரி, பல்கலை. உதவிப் பேராசிரியர் பணி நியமனத்துக்கு யுஜிசி வரைவு விதிகள் வெளியீடு | கல்லூரி மற்றும் பல்கலைக்கழக உதவிப் பேராசிரியர் பணிக்கு புதிய விதிகளை பல்கலைக்கழக மானியக் குழு (யுஜிசி) வெளியிட்டு கருத்து கேட்டுள்ளது. நாட்டிலுள்ள சுமார் 40,000 கல்லூரிகள் மற்றும் 800 பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணிக்கு புதிய விதிமுறைகளை யுஜிசி வகுத்துள்ளது. இந்த வரைவு விதிகள் அதன் இணையதளத் தில் பதிவேற்றம் செய்யப் பட்டுள்ளன. இதில் இளநிலை பட்டப்படிப்புக்கு நேர்முகத் தேர்வில் அதிகபட்சம் 21 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்தை விட அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கு 21 மதிப்பெண், 60 முதல் 79 சதவீதம் பெற்றவர்களுக்கு 19-ம், 55 முதல் 59-க்கு 16-ம் தரப்பட்டுள்ளது). இதையடுத்து முதுகலை பட்டப் படிப்புக்கு அதிகபட்சம் 33 மதிப்பெண் தரப்பட்டுள்ளது. (80 சதவீதத்திற்கு மேல் மதிப்பெண் பெற்றவர்களுக்கு 33 மதிப்பெண், 60 முதல் 79-க்கு 30, 55 முதல் 59-க்கு 25). இதைத் தொடர்ந்து எம்.பில் பட்டத்துக்கு வெறும் 7 மதிப்பெண் மட்டுமே தரப்பட்டுள்ளது. இந்த மூன்றையும் விட உயர்ந்த முனைவர் பட்டத்திற்கு 20 மதிப்பெண்கள் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் முனைவர் பட்டம் பெற்றவர்கள் மத்திய அல்லது மாநில அளவிலான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றால் அது கூடுதல் தகுதியாக குறிப்பிடப்பட்டுள்ளது. உதவிப் பேராசிரியர் பணிக்கு வெயிட்டேஜ் முறையிலான இந்த மதிப்பெண் நிர்ணயம் கல்லூரி மற்றும் ஆசிரியர்கள் வட்டாரத்தில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இது குறித்து ‘தி இந்து’விடம் டெல்லி பல்கலைக்கழக ஆசிரியர் சங்கத் தலைவர் பேராசிரியர் ராஜீவ் ரே கூறும்போது, ‘இது கிராமப்புற மாணவர்களுக்கு எதிரானதாக அமையும். அந்த மாணவர்களுக்கு சிறந்த கல்லூரிகளில் பயில வாய்ப்பு கிடைக்காமல் அதிக மதிப்பெண் பெற முடியாத நிலை உள்ளது. இவர்களால் கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆசிரியர் பணியில் சேர முடியாது. ஏற்கெனவே குறைந்த மதிப்பெண்ணுடன் இளநிலை, முதுநிலை முடித்தவர்களையும் யுஜிசியின் புதிய விதிகள் பாதிக்கும்” என்றார். தற்போது மத்தியப் பல்கலைக்கழகங்கள், யுஜிசி விதிமுறைகளுக்கு உட்பட்டு தம் தேவைக்கு ஏற்ற வகையில் நேர்முகத் தேர்வில் மதிப்பெண் அளித்து வருகின்றன. மாநில அரசுகளும் இதே முறையை கடைப்பிடிக்கின்றன. யுஜிசியின் புதிய விதிகள் 2021 ஜூலை முதல் கட்டாயமாக்கப்பட உள்ளன. இதன்மூலம், பல்கலைக்கழகங்களின் தன்னாட்சி முறையும் மெல்ல முடிவுக்கு வரும் அபாயம் தெரிகிறது. இணைப் பேராசிரியர், பேராசிரியர் பதவி உயர்வுக்கும் புதிய வரைவு விதிகளை யுஜிசி வெளியிட்டுள்ளது.
Related Stories
December 2, 2024