
சென்னை: கல்லுாரி பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்கள் கட்டாயம் பணிக்கு வர உத்தரவிட்டுள் ள தமிழக அரசு, வரும், 9ம் தேதி முதல், அட்டெண்டன்ஸ் கட்டாயம்; அன்றிலிருந்து ஆன்லைன் வகுப்பு நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளது.
கொரோனா தடுப்புக்கான ஊரடங்கை, மேலும் இரண்டு வாரத்திற்கு நீட்டித்துள்ள அரசு, செப்., 1 முதல், பள்ளிகள் திறக்கப்பட்டு, 9, 10, 11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பாடங்கள் நடத்தப்படும் என்று, அறிவித்துள்ளது. மேலும், வெள்ளி, சனி, ஞாயிற்றுக்கிழமைகளில், கோவில்களில் பக்தர்கள் வழிபாட்டுக்கும் தடை விதிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் உள்ள அனைத்து வகை பள்ளிகள் மற்றும் கல்லுாரிகளில் மாணவர் சேர்க்கை நடந்து வருகிறது. பெரும்பாலான கல்லுாரிகளில், ஏற்கனவே ஆன்லைன் வகுப்புகள் துவக்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், தமிழக உயர்கல்வி துறை முதன்மை செயலர் கார்த்திகேயன், கல்லுாரிகள் மற்றும் பல்கலைகளுக்கு அனுப்பியுள்ள சுற்றறிக்கை:
அனைத்து கலை மற்றும் அறிவியல் கல்லுாரிகள், இன்ஜினியரிங் மற்றும் பாலிடெக்னிக் கல்லுாரிகளில், முதலாம் ஆண்டு தவிர்த்து, மற்ற மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகள் வரும், 9ம் தேதி துவங்கும். எனவே, அனைத்து வகை கல்லுாரிகளின் பேராசிரியர்களும், அனைத்து வேலை நாட்களிலும், நேரடியாக கல்லுாரிக்கு பணிக்கு வர வேண்டும். அவர்களுக்கான வருகைப் பதிவை பராமரிக்க வேண்டும். அங்கிருந்தபடி ஆன்லைன் வகுப்புகளை நடத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
முதல்வர் ஆலோசனை
தமிழகத்தில், தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு, 9ம் தேதி காலை, 6:00 மணியுடன் நிறைவடைய உள்ளது. ஊரடங்கு நீட்டிப்பு, கொரோனா பரவல் தாக்கம் ஆகியவை குறித்து, தலைமை செயலகத்தில், முதல்வர் ஸ்டாலின் நேற்று, மருத்துவ நிபுணர்கள் குழு மற்றும் அரசு உயர் அதிகாரிகள், காவல் துறையினருடன், அடுத்தடுத்து ஆலோசனை நடத்தினார்.
ஊரடங்கு நீட்டிப்பு
அதைத் தொடர்ந்து, முதல்வர் ஸ்டாலின் வெளியிட்ட அறிவிப்பு:
நடைமுறையில் உள்ள கட்டுப்பாடுகளுடன், கூடுதலாக நோய் தொற்று பரவலை கட்டுப்படுத்தும் நோக்குடன், பொதுமக்கள் அதிகம் கூடுவதை தவிர்க்க, வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக் கிழமைகளில், அனைத்து மத வழிபாட்டு தலங்களிலும், பொதுமக்கள் வழிபாட்டிற்கு மட்டும் தடை விதிக்கப்படுகிறது. இக்கட்டுப்பாடுகளுடன், ஆக., 23 காலை 6:00 மணி வரை, மேலும் இரண்டு வாரங்களுக்கு ஊரடங்கு நீட்டிக்கப்படுகிறது.
பள்ளி, கல்லுாரி திறப்பு
மருத்துவ நிபுணர்கள் அனைவரும், ஒருமித்த கருத்தாக, பள்ளிகள் திறக்கப்பட வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தி உள்ளனர். பள்ளிகள் செல்லாமல், பல மாதங்களாக வீட்டிலேயே இருப்பது, குழந்தைகள் இடையே, பெரும் மன அழுத்தத்தையும், சமுதாயத்தில் பெரும் கற்றல் இடைவெளியை ஏற்படுத்தி வருவதாகவும் தெரிவித்தனர்.
பெரும்பாலான குழந்தைகளுக்கு, ஆன்லைன் வகுப்புகள் கிடைக்காத சூழல் உள்ளதையும் சுட்டிக் காட்டினர். அதன் அடிப்படையில், செப்., 1 முதல், 9, 10, பிளஸ் 1, பிளஸ் 2 வகுப்புகளில், ஒரு நேரத்தில், 50 சதவீத மாணவர்களுடன், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை பின்பற்றி, பாடங்களை துவங்க உத்தேசிக்கப்பட்டுள்ளது.
அதற்குரிய பூர்வாங்க நடவடிக்கைகளை, பள்ளி கல்வித்துறை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. மருத்துவ கல்லுாரிகள் மற்றும் செவிலியர் படிப்பு உள்ளிட்ட, பல்வேறு மருத்துவம் சார்ந்த கல்லுாரிகள், வரும், 16ல் இருந்து செயல்பட அனுமதிக்கப்படுகிறது. இது தொடர்பான, விரிவான வழிகாட்டு நெறிமுறைகளை, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை வெளியிடும்.
பொதுமக்களுக்கு முதல்வர் விடுத்துள்ள வேண்டுகோள்:
கொரோனா தொற்றை கட்டுப்படுத்த, பொதுமக்கள் அவசியமின்றி வீட்டில் இருந்து வெளியில் வருவதையும், கூட்டம் கூடுவதையும் தவிர்க்க வேண்டும். விழிப்புணர்வு நடவடிக்கைகளில் உள்ளாட்சிகள் ஈடுபட வேண்டும். நோய் பரவலை தடுக்க, முன்மாதிரி நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
கொரோனா நோய் பரவல் தடுப்பிற்கான உறுதிமொழியை, ஒவ்வொருவரும் எடுத்துக் கொண்டு, சொல்லிலும், செயலிலும் பின்பற்ற வேண்டும். முகக்கவசம் அணிவது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது, கைகளை அடிக்கடி சுத்தம் செய்வது ஆகியவற்றை, கட்டாயம் பின்பற்ற வேண்டும். மக்கள் அனைவரும், அரசின் முயற்சிகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்து, கொரோனா தொற்றை முற்றிலும் அகற்ற உதவிட வேண்டும். இவ்வாறு முதல்வர் தெரிவித்துள்ளார்.