ஜனவரி 2-ந்தேதி வரை முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் | முதல்-அமைச்சரின் கணினி தமிழ் விருதுக்கு ஜனவரி 2-ந்தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அரசு அறிவித்துள்ளது. இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதா தமிழ் வளர்ச்சியை கருத்திற்கொண்டு வளர்ந்துவரும் கணினி யுகத்திற்கேற்ப தமிழ் மொழியை கணினியில் அனைத்து நிலைகளிலும் பயன்படுத்தும் வகையில் சிறந்த தமிழ் மென்பொருளை உருவாக்குபவர்களுக்கு முதல்-அமைச்சர் கணினித் தமிழ் விருது வழங்கப்படும் என்றும், விருது தொகையாக ரூபாய் ஒரு லட்சம், ஒரு பவுன் தங்கப்பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும் என சட்டசபையில் அறிவித்தார். அவ்வறிவிப்பின்படி ஆண்டுதோறும் சிறந்த மென்பொருள் தெரிவு செய்யப்பட்டு மென்பொருளை தயாரித்த தனிநபர் மற்றும் நிறுவனத்திற்கு விருது வழங்கப்பட்டு வருகிறது. அவ்வகையில் 2017-ம் ஆண்டு முதல்-அமைச்சர் கணினி தமிழ் விருதுக்கு தனி நபர், நிறுவனத்திடமிருந்து தமிழ் மென்பொருள்கள் வரவேற்கப்படுகின்றன. போட்டிக்கு அனுப்பப்படவுள்ள மென்பொருள்கள் 2014, 2015, 2016-ம் ஆண்டுகளில் தயாரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும். இவ்விருதுக்குரிய விண்ணப்பம் மற்றும் விதிமுறைகளை தமிழ் வளர்ச்சித்துறையின் இணையதளத்தில் இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம். விருதுக்கான விண்ணப்பம் தமிழ் வளர்ச்சி இயக்கத்திற்கு வந்துசேர வேண்டிய கடைசி நாள் 2018-ம் ஆண்டு ஜனவரி 2-ந்தேதி. விண்ணப்பத்தை அனுப்ப வேண்டிய முகவரி, தமிழ் வளர்ச்சி இயக்குனர், தமிழ் வளர்ச்சி வளாகம், தமிழ்ச் சாலை, எழும்பூர், சென்னை-8. தொடர்புகொள்ள வேண்டிய தொலைபேசி எண்கள்: 044- 28190412, 044- 28190413. மின்அஞ்சல் tamilvalarchithurai.gmail.com, இணையதள முகவரி www.tamilvalarchithurai.com இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.