மனித வாழ்வின் முக்கியமான பருவம் குழந்தைப் பருவம். உலகளவில் குழந்தைகளின் உரிமைகள்
பெருமளவு மறுக்கப்பட்டே வருகின்றன என்பது மறுப்பதற்கில்லை. பொதுவாகவே குழந்தைகள் வலிமையற்றவர்களாக இருப்பதால் எளிதில் அவர்களின் உரிமைகளும் அடிப்படைத் தேவைகளும் பறிக்கப்படுகின்றன. குழந்தைகளின் உரிமைகள் அதிகம் மறுக்கப்படுகின்ற இடங்களாகப் பள்ளிகளும், வீடுகளுமே இருக்கின்றன.
குழந்தைகளைப் பாதுகாத்து வளர்த்தெடுக்க வேண்டிய பள்ளிகளிலேயே ஒழுக்கம் என்ற பெயரில் அடித்தும், குழந்தைகளை அவமானப்படுத்தியும் உடல்ரீதியிலும், மனரீதியிலும் பாதிக்கும் தண்டனைகளை வழங்கிவருகின்றனர்.
இதனால் பல்வேறு சூழல்களிலிருந்து பள்ளிக்கு வருகின்ற குழந்தைகளுக்கு ஆரோக்கியமான முறையான கல்வி வழங்குவதும் குழந்தைகளைத் தக்கவைப்பதும் சவாலாகவே உள்ளது. இந்த நிலையில், தமிழகத்தில் குழந்தை நேயப் பள்ளிகளும் ஆங்காங்கே செயல்பட்டுக்கொண்டுதான் இருக்கின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து குழந்தைநேயப் பள்ளித் திட்ட இயக்குநர் ஷியாம்சுந்தர் நம்மிடம் சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.
“குழந்தைகளைக் கொண்டாடும் பள்ளியும்; குழந்தைகள் கொண்டாடும் பள்ளியுமே குழந்தைநேயப் பள்ளி ஆகும். 1986-ன் தேசியக் கல்விக் கொள்கை அனைவருக்கும் ஆரம்பக் கல்வி அளித்தல், சேர்க்கை, தக்கவைத்தல் மற்றும் எல்லாக் குழந்தை களும் முக்கியமான அளவுகளில் கற்றலை அடைதல் ஆகியவற்றை நிறைவேற்ற ஒரு செயல்திட்டத்தை வகுத்தது. அதில் குழந்தையை மையமாகக் கொண்ட முக்கிய அம்சங்களோடு அணுகுமுறையைப் பரிந்துரைத்தது. இருந்தபோதிலும் தரமான, குழந்தை நேயம், அனைவரையும் உள்ளடக்கிய கல்வியை இந்தியாவில் உள்ள எல்லாக் குழந்தைகளுக்கும் அளிப்பதில் பல சவால்கள் இன்றும் நீடிக்கின்றன.
பள்ளிகளில் மாணவர் சேர்க்கையில் முன்னேற்றம் இருந்தபோதிலும் 6 முதல் 14 வயது வரை உள்ள குழந்தைகளில் இன்னும் 80 லட்சம்பேர் மிகப் பெரிய அளவில் பள்ளிக்கு வெளியே உள்ளதாகப் பள்ளியில் சேராமல் உள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பள்ளிகளில் சேர்க்கப்பட்ட குழந்தைகளில்கூட 42.39% பேர் 8ஆம் வகுப்பை முடிக்கும் முன்னரே பள்ளியில் இருந்து நின்றுவிடுகிறார்கள். குறிப்பாக, பெண் குழந்தைகள் மற்றும் புறக்கணிக்கப்பட்ட பிரிவுகளைச் சார்ந்த குழந்தைகளின் சேர்க்கை மற்றும் தக்கவைத்தல் என்பது கவலை அளிப்பதாகவே உள்ளது” என்று ஆதங்கத்தோடு தெரிவித்தார் ஷியாம்.
மேலும் அவர், “குழந்தைகளின் அடிப்படை உரிமைகளைப் பாதுக்காக்கின்ற பள்ளிகளாக நம் பள்ளிகள் இருந்தால்தான் தரமான கல்வியை வழங்க முடியும் எனக் குழந்தைகளுக்கான சர்வதேச நிதியமான யுனிசெப் (UNICEF) வலியுறுத்துகிறது.
பள்ளிச் சூழல், கற்பித்தல், உட்கட்டமைப்பு, சமுதாயப் பங்கேற்பை உத்தரவாதப்படுத்தல், ஆசிரியர் முன்னேற்றம் மற்றும் இணக்கமான உறவு, குழந்தைகள் நலன் சார்ந்த கொள்கைகள் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவதன் மூலம் தரமான கல்வியைக் குழந்தைகளுக்கு வழங்குவதோடு மகிழ்ச்சியாகக் கற்கின்ற, அவர்களின் உரிமைகள் பாதுகாக்கின்ற இடமாகப் பள்ளிகள் திகழும் என்றும் வலியுறுத்துகிறது.
அதே சமயம், குழந்தை மையம் குறித்த உள்ளார்ந்த பார்வைகளை நடைமுறைப்படுத்துவதில் ஆசிரியர்களிடம் உள்ள நம்பிக்கைகள், பழக்கவழக்கங்கள், நடைமுறைகளில் தேவையான மாற்றங்களைக் கொண்டுவர நாம் இன்னும் நிறையவே செயல்படவேண்டியுள்ளது. உடல்ரீதியான தண்டனைகளும், மனரீதியான அச்சுறுத்தல்களும் குழந்தைகளுக்கு அளிக்கப்படுவது இன்னும் குறைந்தபாடில்லை. ‘குழந்தைகள் உரிமைகள் பாதுகாப்பு ஆணையம்’ (NCPCR) ஏழு மாநிலங்களில் 6,632 குழந்தைகளிடம் நடத்திய மாதிரி ஆய்வில் 80%க்கும் மேற்பட்ட குழந்தைகள் கடும் வார்த்தைகளால் திட்டப்படுவதாகவும், 75% க்கும் மேற்பட்ட குழந்தைகள் பிரம்புகளால் அடிக்கப்படுவதாகவும் தெரியவந்துள்ளது.
அதேபோல், பிரதாம் என்ற அமைப்பு வெளியிட்ட கல்வி நிலை குறித்த ஆண்டறிக்கை (Annual Status of Educational Report – ASER) இந்தியப் பள்ளிக் குழந்தைகள் மிகவும் தாழ்ந்த தரத்தில் கற்று வருவதாகத் தெரிவிக்கின்றது. இவ்வறிக்கை 5ஆம் வகுப்பில் உள்ள குழந்தைகளில் பாதிக்கும் மேற்பட்டோர் 2ஆம் வகுப்புப் பாடத்தைக்கூடப் படிக்க முடியாமல் உள்ளனர் என்றும் தெரிவிக்கிறது.” என்கிறார்.
“இந்தச் சவால்கள், குழந்தைகளின் இலவச, கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009-ன் மூலம் கொள்கைச்சூழல் உருவாக்கப்பட்டபோதிலும், இந்தப் பார்வையை நடைமுறையாக்க வலிமையான, திட்டமிட்ட கட்டமைப்பும், ஒருங்கிணைந்த உத்திகளும் இன்னும் தேவை என்பதை எடுத்துக்காட்டுகின்றன. இந்த அடிப்படையில் குழந்தைநேயப் பள்ளி என்ற அணுகுமுறையை யுனிசெப் (UNICEF) பரிந்துரைக்கிறது.
குழந்தைகளின் ஒட்டுமொத்த உரிமைகளையும் பாதுகாக்கின்ற உத்தரவாதப்படுத்து கின்ற தரமான கல்வியை வழங்குகின்ற பயனுள்ள பள்ளி மாதிரியைத் தருகிறது. இம்மாதிரியைக் குழந்தைகளுக்கான சர்வதேச நிதியமான யுனிசெப் மற்றும் சமூகக் கல்வி நிறுவனம் – தமிழ்நாடு ஆகிய அமைப்புகள் தன்னார்வத்துடன் முன்வந்த ஆசிரியர்களின் ஒத்துழைப்போடு தமிழகத்தில் சுமார் ஆயிரம் அரசுப் பள்ளிகளில் நடைமுறைப்
குழந்தைநேயப் பள்ளி என்பது அனைத்துக் குழந்தைகளுக்கும் சம வாய்ப்பை வழங்குகின்ற, கல்வி என்பது குழந்தைகளின் அடிப்படை உரிமை என்பதை உறுதி செய்கின்ற பள்ளியாக இருக்கவேண்டும். ஆக, அது அரசுப் பள்ளியாக மட்டும்தான் இருக்க முடியும். அதனால்தான் அரசுப் பள்ளிகளில் இம்முயற்சி மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குழந்தைகள் கொண்டாடுகின்ற, குழந்தைகளைக் கொண்டாடுகின்ற ஒரு மகிழ்ச்சியான கற்றல் சூழலைக்கொண்ட பள்ளிகளே குழந்தைநேயப் பள்ளிகள் ’’ என்கிறார் ஷியாம்சுந்தர்.
கால மாற்றத்திற்கு ஏற்றாற்போல் ஆசிரியர்கள் கற்பிக்கும் முறையிலும் தொழில்நுட்ப வளர்ச்சியிலும் கைதேர்ந்தவர்களாக வேண்டியது கட்டாயம். குழந்தைகளை உளவியல் ரீதியாகவும், குழந்தைகளின் புறக்காரணிகளையும் புரிந்து செயல்படுவதும் நல்லது.
குழந்தைநேயப் பள்ளி