ரயில்வே துறையில் குரூப்-டி பணிகள் போட்டி தேர்வு எழுதும் மொழியை ஆன்லைனில் மாற்றலாம் சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவிப்பு | குரூப்-டி பணிகளுக்கான விண்ணப்பத்தில் தேர்வுக்கான விருப்ப மொழியை மாற்ற விரும்புவோர் ஆன்லைனிலேயே திருத்தம் செய்து கொள்ளலாம் என ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. இந்திய ரயில்வே துறையில் குரூப்-டி பதவிகளில் (ஹெல்பர், போர்ட்டர் போன்ற பணியிடங்கள்) 62,907 காலியிடங்களை நிரப்ப ஒருங்கிணைந்த வேவைவாய்ப்பு அறிவிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மொத்த காலியிடங்களில் சென்னை ரயில்வே தேர்வு வாரியத்தின் மூலமாக மட்டும் 2,979 இடங்கள் நிரப்பப்பட உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது. தேர்வுக்கு எஸ்எஸ்எல்சி படிப்புடன் என்சிவிடி தேசிய தொழில் பழகுநர் சான்றிதழ் பெற்றவர்களும் ஐடிஐ முடித்தவர்களும் விண்ணப்பிக்கலாம். வயது வரம்பு 18 முதல் 31 வரை என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இத்தேர்வுக்கு கடந்த 19-ம் தேதி காலை 10 மணிக்கு முன்பு வரை ஆன்லைனில் விண்ணப்பித்து, தேர்வில் விருப்ப மொழியை சரியாக தேர்வு செய்யாதோர் தற்போது தங்களுக்கு விருப்பமான மொழியை ஆன்லைனிலேயே தேர்வு செய்து திருத்தம் செய்துகொள்ளலாம் என சென்னை ரயில்வே தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. தேர்வுக்கு ஆன்லைனில் விண்ணப்பிக்க மார்ச் 12-ம் தேதி கடைசி நாள் ஆகும். ஆன்லைன் வழியிலான எழுத்துத் தேர்வு ஏப்ரல் மற்றும் மே மாதங்களில் நடைபெறும். எழுத்துத் தேர்வில் வெற்றி பெறுவோருக்கு உடல் தகுதி திறன் தேர்வு நடத்தப்படும். நேர்முகத் தேர்வு கிடையாது.