எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர மே 6-ந்தேதி ‘நீட்’ தேர்வு: ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம் அடுத்த மாதம் 9-ந்தேதி கடைசி நாள் | மருத்துவ படிப்பில் சேருவதற்கான ‘நீட்’ தேர்வு மே மாதம் 6-ந்தேதி நடக்கிறது. இதற்கு ஆன்லைன் மூலம் விண்ணப்பிப்பது நேற்று தொடங்கியது. விண்ணப்பிக்க மார்ச் 9-ந்தேதி கடைசி நாள். மருத்துவ மாணவர் சேர்க்கை டெல்லியில் உள்ள எய்ம்ஸ், புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவ கல்லூரிகள் நீங்கலாக இந்தியா முழுவதும் உள்ள மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ் ஆகிய படிப்புகளில் சேருவதற்கு ‘நீட்’ எனப்படும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வை தேர்வை ஆண்டு தோறும் மத்திய இடைநிலை கல்வி வாரியம் (சி.பி.எஸ்.இ.) நடத்துகிறது. தமிழ்நாட்டில் முதன் முதலாக கடந்த ஆண்டு மருத்துவ மாணவர்கள் சேர்க்கையில் நீட் தேர்வு முறை அமல்படுத்தப்பட்டது. இந்த ஆண்டுக்கான நீட் தேர்வு பற்றிய விவரங்களை சி.பி.எஸ்.இ. நிறுவனம் நேற்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதுபற்றிய விவரம் வருமாறு:- மே 6-ந்தேதி நீட் தேர்வு மருத்துவ மாணவர் சேர்க்கைக்கான நீட் தேர்வு மே மாதம் 6-ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) நடைபெறுகிறது. பிளஸ்-2 தேர்ச்சி தகுதி பெற்ற மாணவ-மாணவிகள் இந்த தேர்வை எழுதலாம். நீட் தேர்வுக்கு விண்ணப்பிப்பது நேற்று (8-ந்தேதி) தொடங்கியது. இதற்கு ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பிப்பதற்கான ஆன்லைன் முகவரி www.cbseneet.nic.in. விண்ணப்பிக்க மார்ச் 9-ந்தேதி கடைசி நாள் நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க அடுத்த மாதம் (மார்ச்) 9-ந்தேதி கடைசி நாள் ஆகும். விண்ணப்பிக்கும் போது விண்ணப்பதாரரின் பெயர், தந்தை பெயர், சரியான முகவரி, ஆதார் எண் ஆகியவற்றை குறிப்பிட வேண்டும். நீட் தேர்வுக்கான விண்ணப்ப கட்டணம் பொதுப்பிரிவினர் மற்றும் இதர பிற்படுத்தப்பட்டோருக்கு ரூ.1,400. எஸ்.சி. மற்றும் எஸ்.டி.பிரிவினருக்கு ரூ.750 ஆகும். விண்ணப்ப கட்டணத்தை கிரெடிட் கார்டு, டெபிட் கார்டு மற்றும் நெட் பேங்கிங் மூலம் செலுத்த வேண்டும். மார்ச் 10-ந்தேதி இரவு 11-50 மணிவரை பணம் செலுத்தலாம். ஹால் டிக்கெட் நீட் தேர்வு மே மாதம் 6-ந்தேதி காலை 10 மணி முதல் பகல் 1 மணிவரை 3 மணி நேரம் நடைபெறும். தேர்வு ஒரு தாள் மட்டும் கொண்டது. இந்த தேர்வில் இயற்பியல், வேதியியல், உயிரியல் (தாவரஇயல் மற்றும் விலங்கியல்) ஆகியவற்றில் ஆப்ஜெக்டிவ் முறையில் (ஒரு கேள்விக்கு 4 பதில்கள் இருக்கும். அதில் ஒன்று சரியாக இருக்கும்) கேள்விகள் கேட்கப்படும். மொத்தம் 180 கேள்விகள் கேட்கப்படும். விண்ணப்பித்த மாணவ- மாணவிகளில் தகுதியானவர்களுக்கு தேர்வு எழுத ஹால் டிக்கெட் இணையதளத்தில் வெளியிடப்படும். அதை அவர்கள் பதிவிறக்கம் செய்து கொள்ளவேண்டும். தனியாக பிளஸ்-2 படித்து தேர்ச்சி பெற்றவர்கள் (பிரைவேட் கேண்டிடேட்ஸ்) இந்த தேர்வை எழுத முடியாது.