சி.பி.எஸ்.இ. – மாநில பாடத்திட்டங்களை ஒருங்கிணைத்து இந்த ஆண்டு ‘நீட்’ தேர்வில் கேள்விகள் கேட்கப்படும் மத்திய மந்திரி உறுதியளித்ததாக தமிழிசை தகவல் | தமிழக பா.ஜ.க. சார்பில் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:- கடந்த வாரம் மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர், “நீட் தேர்வுக்குரிய வினாத்தாள் தயாரிக்கப்படும்போது மாநில பாடத் திட்டத்தில் இருந்து கேள்விகள் தயாரிக்கப்படும். அத்துடன் இந்தியா முழுமைக்கும் ஒரே மாதிரி கேள்வித்தாள் உருவாக்கப்படும். மாநிலத்திற்கு ஒரு விதமான கேள்வித்தாள் கிடையாது” என்று அறிவித்தார். ஆனால், தேர்வு நடத்தக்கூடிய சி.பி.எஸ்.இ. போர்டு, மத்திய மந்திரி தெரிவித்த கருத்துக்கு மாறுபட்ட செய்திகளை சொன்னதாக ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதுகுறித்து, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகரிடம் தமிழக பா.ஜ.க. தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நேற்று தொடர்பு கொண்டு பேசினார். அப்போது அவர், “இந்த ஆண்டு இந்தியா முழுமைக்கும், அனைத்து மாநில மாணவர்களுக்கும் ஒரே மாதிரியான கேள்வித்தாள் வழங்கப்படும். இத்துடன் சி.பி.எஸ்.இ. பாடத்திட்டம் மற்றும் அனைத்து மாநிலங்களின் பாடத்திட்டங்கள் ஒருங்கிணைக்கப்பட்டு, அதில் இருந்து மட்டுமே கேள்விகள் தயாரிக்கப்படும்” என்று தெளிவுபடுத்தினார். அதனைத் தொடர்ந்து, மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகருக்கு டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் நன்றி தெரிவித்துக் கொண்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.