ஆதார் எண் இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கம் வாடிக்கையாளர்கள் குற்றச்சாட்டு-எண்ணெய் நிறுவனம் விளக்கம் | காலக்கெடுவை மார்ச் மாதம் வரை நீட்டிப்பு செய்தபோதிலும், ஆதார் எண்ணை கியாஸ் சிலிண்டர் இணைப்புடன் இணைக்காத இணைப்புகள் முடக்கப்பட்டு இருப்பதாக வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டியுள்ளனர். சமையல் எரிவாயுக்கான மானியம் பெறுவதற்கு ஆதார் எண்ணை இணைக்கவேண்டும் என்பதை மத்திய அரசு கட்டாயமாக்கியது. மேலும் ஆதார் எண்ணை சமையல் கியாஸ் சிலிண்டர் கணக்குடன் இணைப்பதற்கு கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் 31-ந்தேதி வரையிலும் காலக்கெடுவாக நிர்ணயிக்கப்பட்டிருந்தது. தற்போது அந்த காலக்கெடு வருகிற மார்ச் 31-ந்தேதி வரையிலும் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இந்தநிலையில், ஏற்கனவே அறிவிக்கப்பட்ட பழைய காலக்கெடுவின்படி ஆதார் எண்ணை இணைக்காத கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை இந்தியன் ஆயில் எண்ணெய் நிறுவனத்துக்கு (ஐ.ஓ.சி.) சொந்தமான ‘இன்டேன்’ கியாஸ் நிறுவனம் முடக்கத்தொடங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கிறது. தமிழகம் முழுவதும் பெரும்பாலான கியாஸ் இணைப்புகள் இவ்வாறு முடக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. கியாஸ் இணைப்புகள் முடக்கப்பட்ட வாடிக்கையாளர்கள் தீர்ந்துபோன கியாஸ் சிலிண்டர்களுக்கு பதிலாக, புதிதாக பதிவு செய்ய முடியாது. காலக்கெடு நீட்டிப்பு செய்தபோதிலும், ஆதார் எண்ணை இணைத்தால்தான் கியாஸ் சிலிண்டர்களை பதிவு செய்து பெறமுடியும் என்ற நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர். இன்டேன் நிறுவனத்தின் இந்த நடவடிக்கை தங்களுக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தி இருப்பதாக இன்டேன் வாடிக்கையாளர்கள் குற்றம்சாட்டினர். இது தெரியாமல் பல்வேறு இடங்களில் நீட்டிப்பு செய்யப்பட்ட காலக்கெடுவை கருத்தில்கொண்டு, ஆதார் எண்ணை சமர்ப்பிக்காத வாடிக்கையாளர்கள் கியாஸ் ஏஜென்சிக்கு போன் செய்து பதிவு செய்ய முயற்சிக்கின்றனர். அப்போது, சேவை மைய அதிகாரிகள் உங்கள் கணக்கு முடக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கின்றனர். இதேபோல சிலருடைய செல்போன் எண்ணுக்கும் கியாஸ் சிலிண்டர் இணைப்பு முடக்கப்பட்டதாக குறுந்தகவல் சென்றதாக தெரிகிறது. இதனால் அதிருப்தியடைந்த வாடிக்கையாளர்கள் அவர்களோடு, வாக்குவாதத்தில் ஈடுபடும் சம்பவங்களும் அரங்கேறி வருகிறது. கியாஸ் சிலிண்டர் தீர்ந்தவர்கள், அதனை வாங்குவதற்கு ஏஜென்சிகளின் படிகளை ஏறி இறங்கி வருகின்றனர். இதுகுறித்து கியாஸ் வினியோகஸ்தர்கள் கூறுகையில், “கியாஸ் சிலிண்டர் இணைப்புகளை முடக்குவதும், மீண்டும் இயங்கச் செய்வதும் எங்கள் கைகளில் இல்லை. ஆதார் எண்ணை சமர்ப்பிக்க காலக்கெடு மார்ச் 31-ந்தேதியாக நீட்டிப்பு செய்யப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், முடங்கிய கணக்கை மீண்டும் இயங்க செய்வதற்கு ஆதார் எண் கேட்கப்படுகிறது. இந்த பிரச்சினைக்காக நாள்தோறும் சராசரியாக 30 முதல் 40 வாடிக்கையாளர்கள் எங்கள் அலுவலகங்களுக்கு வருகின்றனர்” என்றனர். கியாஸ் சிலிண்டர் இணைப்புகள் முடக்கப்படும் தகவலை இந்தியன் ஆயில் நிறுவனம் மறுத்துள்ளது. இதுகுறித்து, இந்தியன் ஆயில் நிறுவனத்தின் சென்னை பகுதிக்கான தலைமை மேலாளர் எஸ்.குமார் கூறும்போது, “உங்கள் வாடிக்கையாளரை தெரிந்துக்கொள்ளுங்கள் என்ற படிவத்தில், தங்கள் விவரங்களை அளிக்காத வாடிக்கையாளர்களின் கணக்குகள் மட்டுமே முடக்கப்பட்டுள்ளது. வாடிக்கையாளர்கள் தங்கள் விவரங்களை தெரிவித்து கணக்குகளை மீண்டும் இயங்கச்செய்யலாம்” என்றார்.