ராமநாதபுரத்தில் தனியார் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் கலைத் திருவிழாவில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலைத்திறனை வெளிப்படுத்தினர். தேர்வு செய்யப்பட்டவர்கள் மாநில அளவில் நடைபெற இருக்கும் கலைத்திருவிழாவில் பங்கேற்க உள்ளனர்.
தமிழக அரசின் பள்ளிக் கல்வித்துறை சார்பில் மாணவ, மாணவிகள் இடையே கலை தாகத்தை உருவாக்குவதற்காக கலைத் திருவிழா தமிழகம் முழுவதும் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், முதல் கட்டமாக பள்ளி அளவில், ஒன்றிய அளவில் நடத்தப்பட்டு அதில் தேர்வானவர்கள் மாவட்ட அளவிலான கலைத் திருவிழாவில் பங்கேற்றுள்ளனர்.
இதையடுத்து, ராமநாதபுரம் தனியார் பள்ளி வளாகத்தில் நடந்து வரும் இந்த கலைத் திருவிழாவில் 100க்கும் மேற்பட்ட அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த 1,000க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் கலந்து கொண்டு கலைத்திறமையை காட்டினர்.
இந்த கலைத்திருவிழாவில் பரதநாட்டியம், ஒயிலாட்டம், கட்டக்கால் ஆட்டம், ஆதிவாசிகள் ஆட்டம், குழு நடனம், கருப்பசாமி ஆட்டம் போன்ற பல்வேறு ஆட்டங்களில் மாணவர்கள் தங்களது திறமைகளை காட்டும் கலைத் திருவிழா நடைபெற்றது.
ராமநாதபுரம் மாவட்டத்தில் பள்ளி கல்வித்துறை சார்பில் நடத்தப்படும் கலைத் திருவிழாவில் பங்கேற்க 33,000 மாணவர்கள் மற்றும் மாணவிகள் பதிவு செய்துள்ளதாக மாவட்ட நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மாவட்ட ஆட்சியர் ஜான் டாம் வர்கீஸ் இந்த கலை திருவிழாவை துவக்கி வைத்தார். இதில் தேர்வு செய்யப்படும் குழுக்கள் மாநில அளவில் நடைபெறும் கலைத் திருவிழாவுக்கு ராமநாதபுரம் மாவட்டத்தின் சார்பில் அனுப்பி வைக்கப்படுவார்கள் என பள்ளி கல்வித்துறையினர் தெரிவித்தனர்.