நீட், பொதுத் தேர்வு எழுத உள்ள மாணவர்கள் நலன் கருதி, காலியாக உள்ள முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்களை நிரப்பவேண்டும். இல்லாவிட்டால் 5 லட்சம் மாணவர்களின் எதிர்காலம் கேள்விக்குறி என்று கல்வியாளர்கள், பெற்றோர் கோரிக்கை வைத்துள்ளனர்.
அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் பள்ளிகள், மெட்ரிக்குலேஷன் பள்ளிகளில் மேனிலை வகுப்புகளில் படிக்கும் மாணவ, மாணவியர் சுமார் 12 லட்சம் பேர் மார்ச் மாதம் பொதுத் தேர்வு எழுத உள்ளனர். அதன் பிறகு நீட் உள்பட போட்டி தேர்வுகளை எழுத உள்ளனர். ஆனால், பெரும்பாலான பள்ளிகளில் கணக்கு, இயற்பியல், வேதியியல் உள்ளிட்ட முக்கிய பாடங்களுக்கான ஆசிரியர்கள் இல்லை.
காலாண்டுத் தேர்வுகள் முடிந்த நிலையில், அரையாண்டுத் தேர்வுகள் இந்த மாதம் நடக்க உள்ளன. கடந்த ஆண்டு முதல் பிளஸ் 1 வகுப்புக்கும் பொதுத் தேர்வு நடத்தப்படுவதால் அரசுப் பள்ளிகள் மூலம் ேதர்வு எழுத உள்ள பிளஸ்1, பிளஸ் 2 மாணவ, மாணவியர் சுமார் 5 லட்சம் பேர் பாதிக்கப்படும் நிலை ஏற்பட்டுள்ளது.
அவர்களில் பலரின் கல்வித்தரம் கேள்விக்குரியதாக உள்ளது. குறிப்பாக 50 மாணவர்கள் படிக்கும் வகுப்பில் 4 அல்லது 5 பேர் மட்டுமே நீட் தேர்வுக்கு விண்ணப்பித்துள்ளனர். இது குறித்து கேள்வி கேட்டதற்கு பள்ளியில் பாடம் நடத்த ஆசிரியர்கள் இல்லாத சூழலில், பாடங்களை படிக்கவே நேரம் இல்லை. இதில் நீட் தேர்வில் நிச்சயம் தேர்ச்சி பெற மாட்டோம் என்பதாலேயே விண்ணப்பிக்க வில்லை என்றனர்.
அதாவது மாணவர்களின் கூற்றுப்படி தமிழகத்தில் 3000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருப்பதால் பாடம் கற்க முடியாமல் மாணவர்கள் தவிக்கின்றனர். மேலும், பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட உயர்கல்விக்கு செல்லும் மாணவர்கள் பாதிக்கப்படுவார்கள்.
கடந்த 2016-17ம் ஆண்டில் மேனிலைப் பள்ளிகளில் பணியாற்றி ஓய்வுபெற்ற முதுநிலை ஆசிரியர்கள் பணியிடங்கள், ஏற்கனவே உள்ள காலியிடங்கள் என மொத்தம் 3000 பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டது. ஆனால் அந்த பணியிடங்களுக்கு தகுதியான ஆசிரியர்கள் தேர்வு நடத்தியபோது 2000 பேர்தான் தேர்வு பெற்றனர்.
அவர்களைக் கொண்டு காலியாக இருந்த பணியிடங்கள் நிரப்பப்பட்டன. மீதம் 1000 இடங்கள் காலியாக இருந்தன. இதற்கு பிறகு இரண்டு கல்வியாண்டுகள் முடிந்த நிலையில் 2000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் ஓய்வு பெற்றுள்ளனர். தற்போது 3000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன. அந்த இடங்கள் இன்னும் நிரப்பப்படவில்லை. தற்போது பிளஸ் 1, பிளஸ் 2 தேர்வுகள் மார்ச் மாதம் நடக்க உள்ள நிலையில் முக்கிய பாடங்களை நடத்த ஆசிரியர்கள் இல்லாமல் மாணவர்கள் தவித்து வருகின்றனர்.
காலியாக உள்ள இடங்களில் உடனடியாக ஆசிரியர்களை நிரப்பினால், பொதுத் தேர்வுக்கு மாணவர்கள் தயாராக முடியும். அதனால் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் சிறப்பு தேர்வுகளை நடத்தி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை நியமிக்க பள்ளிக் கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இளநிலை பட்டதாரி ஆசிரியர்களை பொறுத்தவரையில் குறிப்பிட்ட சில மாவட்டங்களில் உபரி ஆசிரியர்களாக 5000 பேர் உள்ளனர். அதனால், இளநிலை பட்டதாரி ஆசிரியர்கள் தவிர்த்து 3000 முதுநிலை பட்டதாரி ஆசிரியர்களை உடனடியாக நியமிக்க வேண்டும்.
இல்லாவிட்டால் பிளஸ்1, 2 படிக்கும் 5 லட்சம் மாணவர்களில் எத்தனை பேர் தேர்ச்சி பெறுவார்கள் என்பது சந்தேகமே என்று அரசுக்கு எச்சரிக்கை மணி அடித்து இருக்கிறார்கள் கல்வியாளர்கள், பெற்றோர். அரையாண்டு தேர்வுக்கு பிறகாவது காலிப் பணியிடங்கள் நிரப்ப வேண்டும் என்றும் பள்ளிக் கல்வி இயக்குநருக்கு கோரிக்கை மனுவும் கொடுத்துள்ளனர். பள்ளிக் கல்வித்துறை கோரிக்கை மீது நடவடிக்கை எடுக்குமா?