
2,315 ஆசிரியர்களுக்கு பணிநியமன ஆணை வழங்கும் விழா | அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் | முதல்வர் கே.பழனிசாமி அறிவிப்பு மாணவர்களின் திறனை வளர்க்கும் வகையில் அனைத்து பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும் என்று முதல்வர் கே.பழனிசாமி அறிவித்தார். ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்திய போட்டித் தேர்வு மூலம் தேர்வு செய்யப்பட்ட 2,315 முதுகலை பட்டதாரி ஆசிரியர்களுக்கும், 58 சிறப்பு கல்வியியல் ஆசிரியர்களுக்கும் பணிநியமன ஆணை வழங்கும் விழா சென்னை பல்கலைக்கழக நூற்றாண்டு விழா அரங்கில் நடைபெற்றது. பள்ளிக்கல்வி அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில், ஒவ்வொரு பாடத்திலும் முதலிடத்தைப் பிடித்த 11 ஆசிரியர்களுக்கு முதல்வர் கே.பழனிசாமி பணிநியமன ஆணையை வழங்கினார். இந்நிகழ்ச்சியில் அவர் பேசியதாவது: ஆசிரியர் பணி என்பது ஒரு புனிதமான பணி. அரசியல்வாதிகள், மருத்துவர்கள், இன்ஜினீயர்கள், வழக்கறிஞர்கள் என அனைவரையும் உருவாக்குவது ஆசிரியர்கள்தான். அப்படிப்பட்ட புனிதமான பணிக்கு தேர்வுசெய்யப்பட்டு பணிநியமன ஆணை பெற்றுள்ள ஆசிரியர்களுக்கு வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஜெயலலிதாவின் அரசு கல்வித் துறைக்கு தொடர்ந்து முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. கடந்த 6 ஆண்டுகளில் 227 புதிய தொடக்கப் பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளன. 116 தொடக்கப் பள்ளிகள், 829 நடுநிலைப் பள்ளிகள், 402 உயர்நிலைப் பள்ளிகள் தரம் உயர்த்தப்பட்டுள்ளன. அரசு பள்ளிகளில் அவ்வப்போது ஏற்படும் காலியிடங்கள் உடனுக்குடன் நிரப்பப்பட்டு வருகின்றன. கடந்த 6 ஆண்டுகளில் 40,333 முழுநேர ஆசிரியர்களும், 15,169 பகுதிநேர ஆசிரியர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். தமிழக கல்வித் துறை வரலாற்றிலேயே முதல்முறையாக, சிறப்பு குழந்தைகளுக்கு பயிற்றுவிக்க, 588 சிறப்பு ஆசிரியர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அரசு பள்ளிகளின் தரத்தை மேம்படுத்தும் வகையில் ரூ.437 கோடி செலவில் அரசு உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளில் உயர் தொழில்நுட்ப கணினி ஆய்வகங்கள் ஏற்படுத்தப்பட உள்ளன. அறிவியல், தொழில்நுட்பம், கலை, இலக்கிய துறைகளில் சிறந்து விளங்கும் 100 அரசு பள்ளி மாணவர்களை ஆண்டுதோறும் தேர்வு செய்து அவர்கள் வெளிநாடுகளில் கல்விப் பயணத்துக்கு செல்ல வாய்ப்பு அளிக்கப்பட உள்ளது. ஒவ்வொரு மாவட்டத்திலும் சிறந்த 4 பள்ளிகளுக்கு புதுமைப்பள்ளி விருதும், சிறந்த 6 ஆசிரியர்களுக்கு கனவு ஆசிரியர் விருதும் இந்த ஆண்டு முதல் வழங்கப்படும். கிராமப்புற மாணவர்களுக்கு கணினி மூலம் பாடங்களை பயிற்றுவிக்கும் வகையில் முதல்கட்டமாக 3 ஆயிரம் தொடக்க, நடுநிலைப் பள்ளிகளில் தலா ரூ.2 லட்சம் செலவில் ‘ஸ்மார்ட் கிளாஸ்’ வகுப்பறைகள் ஏற்படுத்தப்படும். தமிழக மாணவர்கள் எத்தகைய போட்டித் தேர்வுகளையும் தைரியத்தோடு எதிர்கொள்ளும் வகையில் அடுத்த ஆண்டு முதல் பாடத்திட்டம் படிப்படியாக மாற்றியமைக்கப்பட உள்ளது. மேலும், மாணவர்களின் திறனை வளர்க்கவும், அவர்கள் மனஅமைதி, உடல் வலிமை பெறவும் அனைத்துப் பள்ளிகளிலும் யோகா வகுப்புகள் தொடங்கப்படும். இவ்வாறு முதல்வர் பழனிசாமி பேசினார். துணை முதல்வர் ஓ.பன்னீர்செல்வம் பேசும்போது, “இந்த அரசு ஜெயலலிதாவின் திட்டங்களையும், சாதனைகளையும் மக்களிடம் முன்னெடுத்து செல்கிறது. அமைச்சர் செங்கோட்டையன் கட்சிப் பணி என்றாலும் சரி அரசுப் பணி என்றாலும் சரி ஜெட் வேகத்தில் செயல்படக் கூடியவர். அவரைப் போலவே அவர் வகிக்கின்ற பள்ளிக்கல்வித் துறையும் ஜெட் வேகத்தில் இயங்கிக்கொண்டிருக்கிறது” என்றார். இந்த விழாவில் டி.ஜெயக்குமார், திண்டுக்கல் சி.சீனிவாசன், ஆர்.பி.உதயகுமார் உள்ளிட்ட அமைச்சர்கள், பாடநூல் கழக தலைவர் பா.வளர்மதி, நிர்வாக இயக்குநர் டி.ஜெகநாதன், கல்வித் துறை இயக்குநர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர். முன்னதாக, பள்ளிக்கல்வித் துறையின் முதன்மைச் செயலர் பிரதீப் யாதவ் வரவேற்றார். நிறைவாக பள்ளிக்கல்வி இயக்குநர் ஆர்.இளங்கோ வன் நன்றி கூறினார்.