மின் இணைப்பு எண்ணுடன் ஆதார் நம்பரை இணைக்க வேண்டும் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியிருக்கும் நிலையில் ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த 2 நாட்கள் கூடுதலாக அவகாசம் வழங்குவதாக மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. அரசின் நலத்திட்டங்கள், மானியங்கள் பெற என அனைத்திற்கும் தற்போது ஆதார் எண் கேட்கப்படுகிறது. செல்போன் சிம் கார்டு வாங்க வேண்டும் என்றால் கூட தற்போது ஆதார் கார்டு இருந்தால் தான் எளிதாக வாங்க முடியும் என்ற நிலை வந்துவிட்டது.
மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க
12 இலக்கங்களை கொண்ட ஆதார் எண்களில் ஒருவரின் அனைத்து விவரங்களும் அடங்கியிருப்பதால் இதன் மூலம் மோசடிகளை தடுக்க முடியும் என்றும் போலிகளை களைந்து உண்மையான பயனாளிகளுக்கு நலத்திட்டங்கள் சேரும் என்ற அடிப்படையிலும் ஆதார் அட்டைகள் நல்லத்திட்டங்களுக்கு அவசியம் கேட்கப்படுகிறது. அந்த வகையில், மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்வாரியம் அறிவித்தது.
மின்வாரியம் மெசேஜ்
இதுதொடர்பாக மின்நுகர்வோரின் செல்போன் எண்ணுக்கும் மின்வாரியம் மெசேஜ் அனுப்பியது. நேரடியாக மின் கட்டணம் செலுத்துபவர்கள் ஆதார் அட்டையின் நகலை எடுத்து சென்று ஆதார் எண்ணை இணைத்துக் கொள்ளலாம் என்று மின்சார வாரியம் அறிவுறுத்தியிருந்தது. இதைத்தொடர்ந்து மின் நுகர்வோர் தங்களது ஆதார் எண்ணை மின் இணைப்புடன் இணைத்து வருகின்றனர்.
100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு..
ஆதார் எண்ணை இணைப்பதால் 100 யூனிட் இலவச மின்சாரத்திற்கு எந்த பாதிப்பும் இருக்காது என்று மின்சார வாரியம் நுகர்வோர்களுக்கு தெளிவுபடுத்தியிருக்கிறது. ஆனாலும் பல மின் இணைப்பு வைத்திருபவர்கள் மத்தியில் தங்களுக்கு இலவச மின்சாரம் கிடைக்காதோ என்ற அச்சத்தில் உள்ளனர். இதனால், பலரும் ஆதார் எண்ணை இணைக்க தயக்கம் காட்டி வருவதாக சொல்ல்படுகிறது.
ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே
இது, ஒருபக்கம் இருக்க ஆதார் எண்ணை இணைத்தால் மட்டுமே மின் கட்டணத்தை செலுத்தும் வகையில் நடைமுறைகள் இணையதளத்தில் மாற்றி அமைக்கப்பட்டுள்ளது. இணைய பயன்பாடு பெருகிவிட்டதால் பெரும்பாலான நுகர்வோர்கள் இணையதளம் மூலமாகவே மின் கட்டணத்தை செலுத்துகின்றனர். அது மட்டும் இன்றி, கூகுள் பே, போன்பே, பேடிஎம் போன்ற செயலிகள் மூலம் அதிக அளவில் மின் கட்டணத்தை செலுத்துவதை பார்க்க முடிகிறது.
கட்டணத்தை செலுத்துவதில் சிரமம்
தற்போது ஆதார் எண் இணைக்க வேண்டும் என்று மின்வாரியம் அறிவுறுத்திய நிலையில், இணையதளம் மூலமாகவோ பிற செயலிகள் மூலமாகவோ மின் கட்டணத்தை செலுத்த முயன்றாலும் ஆதார் எண்ணை இணைக்கும் பக்கத்திற்கு தானாகே சென்று விடுவதாக நுகர்வோர்கள் தரப்பில் கூறப்படுகிறது. இதனால், மின் கட்டணத்தை செலுத்துவதில் பலருக்கும் சிரமம் ஏற்பட்டதாக தெரிகிறது. மின் இணைப்பு எண்ணோடு ஆதார் எண்ணை இணைத்த பிறகு மட்டுமே மின் கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
மின் கட்டணம் செலுத்த முடியாததால்..
இதனால், ஆதார் எண்ணை இணைக்கதாவர்களால் மின் கட்டணத்தை செலுத்த முடியாத நிலை ஏற்பட்டது. இந்த நிலையில், ஆதார் எண்ணை இணைக்காதவர்களுக்கு மின் கட்டணம் செலுத்த 2 நாட்கள் அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. நவம்பர் 24 ஆம் தேதி முதல் 30 தேதி வரை மின் கட்டணம் செலுத்த வேண்டிய மின் நுகர்வோர்களுக்கு 2 நாட்கள் அவகாசம் வழங்கப்படும் என்று மின்சார வாரியம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அபராத கட்டணம் வசூலிக்கக் கூடாது
அதேவேளையில், ஆதார் எண்ணை இணைக்காமல் உள்ள நுகர்வோர்களுக்கு மட்டுமே இந்த அவகாசம் வழங்க வேண்டும் என்றும் அவர்களுக்கு அபராத கட்டணம் எதையும் வசூலிக்கக் கூடாது எனவும் மின்சார வாரியம் அறிவுறுத்தியுள்ளது.