கோவை, பாரதியார் பல்கலையில், விதிகளை மீறி, கல்வி மைய அனுமதி வழங்கியது தொடர்பாக, நீதிமன்றம், ‘சம்மன்’ அனுப்பி உள்ளது. அதனால், படிப்பு மையங்களில் மாணவர் சேர்க்கை நிறுத்தப்பட்டுள்ளது. கோவை, பாரதியார் பல்கலையில், சில ஆண்டுகளாக விதிமீறல்களும், முறைகேடுகளும் தொடர்ந்த வண்ணம் உள்ளன. பழைய விடைத்தாள்களை விற்பனை செய்தது, லஞ்சம் பெற்று பேராசிரியர் களை நியமனம் செய்தது என, பல முறைகேடுகள் கண்டுபிடிக்கப்பட்டன. பல்கலை துணைவேந்தர், கணபதி கைது செய்யப்பட்டு, லஞ்ச ஒழிப்பு போலீசாரின் விசாரணை நடந்து வருகிறது. அதனால், உயர் கல்வி துறை செயலர், மங்கத்ராம் ஷர்மா தலைமையிலான குழு, பல்கலை நிர்வாகத்தை நடத்தி வருகிறது.இந்த நிர்வாகத்திலும், முறைகேடு புகார்கள் எழுந்துள்ளன. பல்கலையின் மானிய குழு விதிகளின் படி, தொலைநிலை கல்விக்கோ அல்லது ரெகுலர் கல்விக்கோ, எந்த பல்கலையும், தனியார் கல்வி மையங்களுக்கு அனுமதி தரக் கூடாது.ஆனால், பாரதியார் பல்கலை சார்பில், தனியார் வழியாக, பிற மாநிலங்களில், கல்வி மையங்கள் அமைக்க அனுமதிக்கப்பட்டுள்ளது. மேலும், அவற்றின் வழியே, ரெகுலர் படிப்புக்கான சான்றிதழ்கள் வழங்கப்படுகின்றன.இந்த நடவடிக்கைக்கு, யு.ஜி.சி.,யும், உயர் நீதிமன்றமும் தடை விதித்தன. அதனால், நடப்பு கல்வி ஆண்டில், புதிய மாணவர் சேர்க்கைக்கு தடை விதிக்கப்பட்டது. ஆனால், நவ., 28ல், உயர் கல்வி செயலர் தலைமையில், சென்னையில், சிண்டிகேட் கூட்டம் நடத்தப்பட்டு, தனியார் படிப்பு மையங்களில், மாணவர்களைச் சேர்க்க, மீண்டும் அனுமதி அளிக்கப்பட்டது.இதற்கு, சிண்டிகேட் உறுப்பினர்கள், பல்கலையின் இணைப்பு கல்லுாரிகள், தரப்பில் கடும் ஆட்சேபம் தெரிவிக்கப்பட்டது. ஆனால், உயர் கல்வி துறை தரப்பில், தனியார் மையங்களுக்கு ஆதரவான நிலைப்பாடு எடுக்கப்பட்டது.இந்நிலையில், பல்கலை தரப்பில், நீதிமன்ற அவமதிப்பு செய்துள்ளதாக, தனியார் கல்லுாரிகள் சங்கத்தின் சார்பில், சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில், உயர் கல்வி செயலரும், பல்கலையின் சிண்டிகேட் உறுப்பினர்களும் விளக்கம் அளிக்க, நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அதனால், தனியார் கல்வி மையங்களில், மாணவர் சேர்க்கையை நிறுத்தி வைக்க, பல்கலை நிர்வாகம், வாய்மொழி உத்தரவிட்டுள்ளது