தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் செய்திக் குறிப்பு மிகக் குறைந்த (72) நாட்களில் தொகுதி – 4 முடிவுகள் வெளியீடு தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம், தொகுதி-4 ல் அடங்கிய பணிகள் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பதவிகளில் உள்ள 6491 காலிப்பணியிடங்களுக்கு அறிவிக்கை எண் 19 / 2019 ஐ 16.06.2019 அன்று வெளியிட்டது. இதற்கான தேர்வு 01.09.2019 முற்பகல் அன்று நடத்தப்பட்டது. இத்தேர்வுக்கு 16,29,865 விண்ணப்பதாரர்கள் 301 தாலுகாக்களில் உள்ள 5575 தேர்வு மையங்களில் தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இதற்கான தேர்வு முடிவுகளை தேர்வாணையம் இன்று (12.11.2019) வெளியிட்டுள்ளது. விண்ணப்பதாரர்கள் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் தங்களது தர வரிசையினையும் அவர்கள் பெற்ற மதிப்பெண்களையும் தேர்வாணையத்தின் இணையதளமான www.tnpsc.gov.in மற்றும் www.tnpscexams.in ல் அவர்களது பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்துகொள்ளலாம். தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டவர்களின் விவரம் 1. பெண்கள் 718995 2. ஆண்கள் 531410 3. மூன்றாம் பாலினத்தவர் 25 4. முன்னாள் இராணுவத்தினர் 4104 5. ஆதரவற்ற விதவைகள் 4973 6. மாற்றுத்திறனாளிகள் 16601 பதினாறு லட்சத்திற்கும் மேலான விண்ணப்பதாரர்கள் பங்கேற்ற இந்த தொகுதி 4 தேர்வின் முடிவுகளை தேர்வு நடைபெற்ற நாளிலிருந்து வெறும் எழுபத்தி இரண்டே (72) நாட்களில் தேர்வு எழுதிய அனைத்து விண்ணப்பதாரர்களின் விடைத்தாள்களையும் மதிப்பீடுசெய்து, தரவரிசைப்படுத்தி முடிவுகளை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. இவ்வளவு குறைவான நாட்களில் தேர்வு முடிவுகளை வெளியிடுவது தேர்வாணைய வரலாற்றில் முதன்முறையாகும். இதற்கு முன்னர் இத்தகைய தேர்வு முடிவுகளை வெளியிட குறைந்தது 105 நாட்கள் தேவைப்பட்டது. தற்போது அது 72 நாட்களாக குறைந்துள்ளது. இந்தியாவில் எந்த ஒரு மாநிலத் தேர்வாணையமும் இவ்வளவு அதிக எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் எழுதிய தேர்வு முடிவுகளை இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தரவரிசைப்படுத்தி வெளியிட்டதில்லை. விரைவாக தேர்வு முடிவுகளை வெளியிடுவதில் தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் நாட்டிலேயே முன்னோடியாக திகழ்கிறது. தேர்வாணையம் நடத்தும் தேர்வுகளில் ஆள் மாறாட்டத்தைத் தடுக்கவே, தேர்வர்களின் புகைப்படம் மற்றும் அவர்களது விவரங்களடங்க்கிய விடைத்தாள்கள் வழங்கப்பட்டு வருகின்றன. மேலும் தேர்வாணையத்தின் வினாத்தாட்களில் தவறுகள் ஏதும் இருப்பின் அதனை சுட்டிக்காட்ட, கணினி தகவல் தொழில் நுட்பத்தினை பயன்படுத்தி இணையப்பக்கம் ஒன்று உருவாக்கப்பட்டது. இதன்மூலம் விண்ணப்பதாரர்களின் கேள்வித்தாள் குறித்த கோரிக்கைகள் மிகக்குறைந்த நாட்களின் பரிசீலிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டன. தேர்வாணையத்தின் செயல்பாடுகளில் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யும் பொருட்டு தேர்வர்கள் இத்தேர்வில் பெற்ற மதிப்பெண்கள், அவர்களின் பொதுவான தரவரிசை மற்றும் அவர்களின் இன சுழற்சிக்கான தரவரிசை, சிறப்பு ஒதுக்கீட்டிற்கான தரவரிசை ஆகியன வெளியிடப்பட்டுள்ளன. மேலும் யார் வேண்டுமானலும் எந்த ஒரு விண்ணப்பதாரரின் மதிப்பெண்ணையும் அவர்களின் பதிவெண்ணை உள்ளீடு செய்து தெரிந்து கொள்ளலாம். தற்போது வெளியிடப்பட்டுள்ள தரவரிசை மற்றும் இட ஒதுக்கீட்டு விதிகளின் அடிப்படையில் தேவையான எண்ணிக்கையிலான விண்ணப்பதாரர்கள் சான்றிதழ் சரிபார்க்கும் நிலைக்கு தெரிவு செய்யப்படுவர். சான்றிதழ் சரிபார்ப்பிற்கு தெரிவு செய்யப்படுபவர்களின் பட்டியல் விரைவில் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்படும். அத்தகைய விண்ணப்பதாரர்களுக்கு குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் வழியாக மட்டுமே விவரங்கள் தெரிவிக்கப்படும். அஞ்சல் / கடிதம் வழியாக தகவல்கள் ஏதும் அனுப்பப்பட மாட்டாது. குறுஞ்செய்தி மற்றும் மின்னஞ்சல் பெறப்படாவிட்டால் அதற்கு தேர்வாணையம் பொறுப்பல்ல. எனவே விண்ணப்பதாரர்கள் தேர்வாணைய இணையதளத்தினை (www.tnpsc.gov.in) தொடர்ந்து கண்காணிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் தன்னுடைய ஒவ்வொரு செயல்பாட்டிலும் முற்றிலும் வெளிப்படைத் தன்மையினை உறுதி செய்யவும் தேர்வு முடிவுகளை விரைவாக வெளியிடவும் அவசியமான மாற்றங்களை படிப்படியாக செயல்படுத்தி வருகிறது. இவ்வகையான வரவேற்கத்தக்க மாற்றங்களை கொள்குறிவகைத் (Objective) தேர்வுகள் மட்டுமின்றி, விவரித்து எழுதும் (Descriptive type) வகையிலான முதன்மை எழுத்துத்தேர்வின் (Main Written Examination) முடிவுகளையும் விரைந்து வெளியிட தேர்வாணையம் தேவையான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இரா. சுதன், இ.ஆ.ப., தேர்வுக்கட்டுப்பாட்டு அலுவலர்