
உதவி இன்ஜினீயர் பணி வாய்ப்பு தமிழ்வழி பொறியாளருக்கு இட ஒதுக்கீடு முக்கியத் தேதி ஆன்லைனில் விண்ணப்பிக்கக் கடைசி நாள்: மார்ச் 26 எழுத்துத் தேர்வு: மே 20. தமிழக அரசின் பொதுப்பணித் துறை, நெடுஞ்சாலைத் துறை, ஊரக வளர்ச்சித் துறையில் உதவி இன்ஜினீயர் பதவியில் (சிவில் மற்றும் எலெக்ட்ரிக்கல்) 330 காலியிடங்கள் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் (டி.என்.பி.எஸ்.சி.) மூலமாக நிரப்பப்பட உள்ளன. தேவையான தகுதி சிவில் இன்ஜினீயர் பதவிக்கு சிவில் இன்ஜினீயரிங் அல்லது ஸ்டிரக்சுரல் இன்ஜினீயரிங் படிப்பிலும், எலெக்ட்ரிக்கல் இன்ஜினீயர் பதவிக்கு எலெக்ட்ரிக்கல் அல்லது எலெக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேஷன் இன்ஜினீயரிங் பிரிவிலும் பொறியியல் பட்டம் பெற்றிருக்க வேண்டும். வயது வரம்பு பொதுப் பிரிவினருக்கு 30. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு (எஸ்.சி., எஸ்.டி., பி.சி., எம்.பி.சி., டி.என்.சி.) வயது வரம்பு கிடையாது. தேர்வு முறை விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு, நேர்முகத் தேர்வு அடிப்படையில் பணிக்குத் தேர்வுசெய்யப்படுவார்கள். எழுத்துத் தேர்வில் 2 தாள்கள் இருக்கும். முதல் தாளில் சம்பந்தப்பட்ட பொறியியல் பாடப் பிரிவில் இருந்து ‘அப்ஜெக்டிவ்’ முறையில் 200 கேள்விகள் இடம்பெறும். ஒரு கேள்விக்கு ஒன்றரை மதிப்பெண் வீதம் மொத்தம் 300 மதிப்பெண். தாள்-2 பொது அறிவு தொடர்புடையது. இதில் 100 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 2 மதிப்பெண் வீதம் மொத்தம் 200 மதிப்பெண். எழுத்துத் தேர்வுக்கு மொத்த மதிப்பெண் 500. தேர்வில் வெற்றிபெறுபவர்கள் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். இதற்கு 70 மதிப்பெண். இறுதியாக எழுத்து, நேர்முகம் ஆகிய தேர்வுகளின் மதிப்பெண், இட ஒதுக்கீடு ஆகியவற்றின் அடிப்படையில் பணி நியமனம் நடைபெறும். தமிழ்வழிப் பொறியாளருக்கு இட ஒதுக்கீடு தமிழ்வழியில் படித்தவர்களுக்கு அரசுப் பணியில் 20 சதவீதம் இட ஒதுக்கீடு அளிக்கப்படுகிறது. அந்த வகையில், தமிழ்வழியில் பொறியியல் படிப்பை முடித்தவர்களுக்கு காலியிடங்களில் 20 சதவீத இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன. அவர்கள் எஸ்.எஸ்.எஸ்.சி., பிளஸ் 2 கல்வித் தகுதியை எந்த வழியில் முடித்திருக்கிறார்கள் என்பது பார்க்கப்படாது. பொறியியல் கல்வியைத் தமிழ்வழியில் படித்திருக்கிறார்களா என்பது மட்டுமே கணக்கில்கொள்ளப்படும். தமிழ்வழியில் படித்ததற்குச் சான்றிதழ் பெற வேண்டும். தகுதியுடைய இன்ஜினீயரிங் பட்டதாரிகள் டி.என்.பி.எஸ்.சி. இணையதளத்தில் (www.tnpsc.gov.in) விண்ணப்பிக்க வேண்டும்.ஜெ.கு.லிஸ்பன் குமார் |