பிளஸ்-1 பொதுத்தேர்வு இன்று(6.3.2018) தொடக்கம். 8 லட்சத்து 63 ஆயிரம் பேர் எழுதுகிறார்கள் | பிளஸ்-1 பொதுத்தேர்வு நாளை தொடங்குகிறது. இந்த தேர்வை 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 மாணவ-மாணவிகள் எழுதுகிறார்கள். இன்று தொடக்கம் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் முதல் முறையாக பிளஸ்-1 வகுப்பு மாணவ-மாணவிகளுக்கு இந்த ஆண்டு அரசு பொதுத்தேர்வு நடக்கிறது. இந்த தேர்வு நாளை (புதன்கிழமை) தொடங்குகிறது. இதனை 7 ஆயிரத்து 70 மேல்நிலை பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 61 ஆயிரத்து 915 மாணவ-மாணவிகள், 1,753 தனித்தேர்வர்கள் என மொத்தம் 8 லட்சத்து 63 ஆயிரத்து 668 பேர் எழுத உள்ளனர். பள்ளிகளில் இருந்து மாணவிகள் 4 லட்சத்து 60 ஆயிரத்து 406 பேரும், மாணவர்கள் 4 லட்சத்து ஆயிரத்து 509 பேரும் தேர்வு எழுதுகின்றனர். மாணவர்களை விட கூடுதலாக 58,897 மாணவிகள் தேர்வு எழுதுகிறார்கள். பள்ளிகளில் இருந்து அறிவியல் பாடத்தொகுதியின் கீழ் 5 லட்சத்து 28 ஆயிரத்து 819 பேரும், வணிகவியல் பாடத்தொகுதியின் கீழ் 2 லட்சத்து 61 ஆயிரத்து 703 பேரும், கலை பாடத்தொகுதியின் கீழ் 13 ஆயிரத்து 969 பேரும், தொழிற்கல்வி பாடத்தொகுதியின் கீழ் 57 ஆயிரத்து 424 பேரும் தேர்வு எழுத உள்ளனர். சென்னையில் 407 பள்ளிகளில் இருந்து 49 ஆயிரத்து 422 பேரும், புதுச்சேரியில் 150 பள்ளிகளில் இருந்து 15 ஆயிரத்து 404 பேரும் தேர்வு எழுதுகிறார்கள். தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் 2 ஆயிரத்து 795 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. சிறையில் தேர்வு மையம் வேலூர், கடலூர், புதுக்கோட்டை, கோவை, மதுரை, பாளையங்கோட்டை, திருச்சி, சென்னை புழல் சிறைகளில் உள்ள 62 ஆண் சிறைவாசிகள் புழல் சிறையில் அமைக்கப்பட்டுள்ள தேர்வு மையத்தில் தேர்வு எழுத இருக்கின்றனர். தமிழ் வழியில் பயின்று தேர்வு எழுதும் பள்ளி மாணவர்களுக்கு தேர்வு கட்டணம் செலுத்துவதில் இருந்து விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. இவர்களின் எண்ணிக்கை 5 லட்சத்து 14 ஆயிரத்து 498 ஆகும். இந்த பொதுத்தேர்வுக்காக 43 ஆயிரத்து 190 ஆசிரியர்கள் அறை கண்காணிப்பாளர் பணியில் ஈடுபடுத்தப்பட உள்ளனர். சலுகைகள் மாற்றுத்திறனாளி தேர்வர்கள் அனைவருக்கும் கூடுதல் ஒரு மணி நேரம் உள்பட பல சலுகைகள் வழங்கப்பட உள்ளன. அனைத்து தேர்வு மையங்களுக்கும் தேவையான எண்ணிக்கையில் முதன்மை விடைத்தாள்கள், கூடுதல் விடைத்தாள்கள், முகப்பு சீட்டுகள் அனுப்பி வைக்கப்பட்டன. தேர்வின் போது தேர்வர்களது புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் அச்சிடப்பட்ட முகப்பு சீட்டுகள் முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படுகிறது. தேர்வர், முகப்பு சீட்டில் அச்சிடப்பட்டுள்ள விவரங்களை சரிபார்த்து கையொப்பமிட்டால் மட்டுமே போதும். பறக்கும் படை தேர்வர்கள் காப்பி அடிப்பதை தடுக்க 4 ஆயிரம் பேர் கொண்ட பறக்கும் படை அமைக்கப்பட்டு உள்ளது. மேலும் மாணவ-மாணவிகள் ஒழுங்கீன செயல்பாடுகளை தவிர்க்கும்படி அறிவுரை வழங்கப்பட்டு இருக்கிறது.
Related Stories
April 5, 2024
February 20, 2024