TNPSC Group 4 – 7,301 காலி இடங்களுக்கு 21, 83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு குரூப்-4 பணியிடத்திற்கு 300 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர்.
டிஎன்பிஎஸ்சி குரூப் 4தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான காலக்கெடு கடந்த 28ம் தேதியுடன் முடிந்த நிலையில், மொத்தம் 21.83 லட்சம் பேர் விண்ணப்பித்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சராசரியாக ஒரு பணி இடத்துக்கு 300 பேர் போட்டி என்ற விதத்தில் தேர்வு நடைபெறவுள்ளது.
தமிழ்நாடு அமைச்சுப் பணி, தமிழ்நாடு நீதி அமைச்சுப் பணி, தமிழ்நாடு தலைமைச் செயலகப் பணி, தமிழ்நாடு சட்டமன்ற பேரவைச் செயலகப் பணி, தமிழ்நாடு குடிசைப்பகுதி மாற்று வாரியம் தொழில்நுட்ப சார்நிலைப் பணி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய சார் நிலைப் பணிகளில் உள்ள 7301 காலிப்பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டது.
இதற்கான விண்ணப்பங்கள் ஏப்ரல் 28ம் தேதிவரை பெறப்பட்டன. கொரோனா பெருந்தொற்று காரணமாக கடந்த 2019ம் ஆண்டுக்கு பின்னர் குரூப் 2, குரூப் 4 போன்ற தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. தற்போது இரு தேர்வுகளுக்கும் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து ஏராளமானோர் விண்ணப்பித்திருந்தனர். குருப் 2 மற்றும் குருப் 2 ஏ ஆகிய பணியிடங்களில் காலியாக உள்ள 5 ஆயிரத்து 413 இடங்களுக்கு, 11 லட்சம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர். இது கடந்த முறையை விட 60 சதவீதம் அதிகமாகும்.
இதேபோல் தற்போது குரூப் 4 தேர்வுக்கும் இதுவரை இல்லாத அளவாக தேர்வர்கள் அதிகளவில் விண்ணப்பித்துள்ளனர். கடந்த ஏப்ரல் 25ம் தேதி குரூப் 4 தேர்வுக்கு 13 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில், ஏப்ரல் 27ம் தேதி இரவில் இந்த எண்ணிக்கை 17.83 லட்சமாக உயர்ந்தது.
இறுதி நாளான ஏப்ரல் 28ம் தேதி இந்த எண்ணிக்கை பன்மடங்கு அதிகரித்தது. அதன்படி, 7,301 காலி இடங்களுக்கு 21, 83,225 பேர் விண்ணப்பித்துள்ளனர். அதாவது ஒரு குரூப்-4 பணியிடத்திற்கு 300 பேர் வீதம் விண்ணப்பித்துள்ளனர். கடந்த 2019ம் ஆண்டு குரூப்-4 தேர்வுக்கு 16 லட்சம் பேர் மட்டுமே விண்ணப்பித்து இருந்தனர்.