ஓய்வூதிய நலத்திட்டங்களுக்கு விண்ணப்பித்தவர்கள் வங்கிகளில் ஏ.டி.எம். கார்டை பெற்றுக்கொள்ளலாம் வருவாய்த்துறை அறிவிப்பு | தமிழக அரசு வருவாய் நிர்வாக கமிஷனர் சத்யகோபால் நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- தமிழ்நாடு அரசு சமூக பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் சமுதாயத்தில் நலிவடைந்த பிரிவினரின் நலனுக்காக முதியோர் ஓய்வூதியம், மாற்றுத் திறனாளிகளுக்கான ஓய்வூதியம் மற்றும் விதவைகள் ஓய்வூதியம் உள்ளிட்ட 9 வகையான ஓய்வூதிய நலத்திட்டங்களை வழங்கி வருகிறது. மேற்படி ஓய்வூதியம் பெறும் பயனாளிகளின் நலனுக்காக தொடர்புடைய வங்கிகளின் மூலம் பணப்பற்று அட்டை (ஏ.டி.எம்./ ரூபே கார்டு) வழங்க மாநில வங்கி ஒருங்கிணைப்பாளர்களின் குழுமத்திடம் கேட்டுக் கொள்ளப்பட்டதற்கிணங்க, முதற்கட்டமாக பணப்பற்று அட்டை தேவை என விண்ணப்பம் அளித்த பயனாளிகளுக்கு தொடர்புடைய வங்கிகள் மூலம் பணப்பற்று அட்டை வழங்க வங்கிகள் தயார் நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே பணப்பற்று அட்டை பெற விண்ணப்பித்துள்ள பயனாளிகள் தொடர்புடைய வங்கிகளை அணுகி தங்களுக்கான பணப்பற்று அட்டையை பெற்றுக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இதுவரை பணப்பற்று அட்டை கோரி விண்ணப்பிக்காதவர்கள் அதற்கான விண்ணப்பத்தினை தொடர்புடைய வங்கியில் உடனடியாக சமர்ப்பிக்குமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Related Stories
December 2, 2024