சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு மாணவர்களுக்கு தேர்ச்சி முறையில் சிறப்பு சலுகை இந்த ஆண்டு மட்டும் அமல்படுத்தப்படும் என அறிவிப்பு | இந்த ஆண்டு சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு தேர்ச்சிமுறையில் சிறப்பு சலுகை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அவர்களின் தேர்ச்சிக்கு (குறைந்தபட்சம் 33 சதவீத மதிப்பெண்) தியரி தேர்வு, அகமதிப்பீடு இரண்டும் சேர்த்து கணக்கிடப்படும். முன்பு ஒவ்வொன்றிலும் தனித்தனியே குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற்றாக வேண்டும் என இருந்தது. மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) கடந்த 2010-ம் ஆண்டு வரை 10-ம் வகுப்பு தேர்வை கட்டாய பொதுத்தேர்வாக நடத்தி வந்தது. 2011-ம் ஆண்டு முதல், மாணவர்கள் விரும்பினால் 10-ம் வகுப்பு தேர்வை பொதுத்தேர்வாக எழுதலாம். இல்லாவிட்டால் பள்ளி அளவிலான சாதாரண வருடாந்திர தேர்வாகவும் எழுதலாம் என்ற புதிய முறை அறிமுகப்படுத்தப்பட்டது. மாணவர்களின் விருப்பத்துக்கு விடப்பட்டதால் ஒவ்வொரு ஆண்டும் பல மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை பள்ளி அளவிலான தேர்வாக எழுதுவதிலேயே ஆர்வம் காட்டினர். பொதுத்தேர்வாக எழுதாததால் 10-ம் வகுப்புக்கு அவர்கள் உரிய முக்கியத்துவம் கொடுப்பதில்லை. இதனால் மாணவர்களின் கல்வித்தரம் குறைவதாக ஆய்வில் தெரியவந்தது. இதைத்தொடர்ந்து, பெற்றோரும், ஆசிரியர்களும் முன்பு இருந்து வந்ததைப் போன்று 10-ம் வகுப்பு தேர்வை கட்டாய பொதுத்தேர்வாக அறிவிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்துக்கும், சிபிஎஸ்இ-க்கும் வேண்டுகோள் விடுத்தனர். இதை ஏற்று, 2017-18-ம் கல்வி ஆண்டு முதல் மீண்டும் 10-ம் வகுப்பு தேர்வு கட்டாய பொதுத்தேர்வாக நடத்தப்படும் என்று சிபிஎஸ்இ அறிவித்தது. அதன்படி, இந்த ஆண்டு சிபிஎஸ்இ மாணவர்கள் 10-ம் வகுப்பு தேர்வை கட்டாய பொதுத்தேர்வாக எழுத உள்ளனர். 10-ம் வகுப்பு பொதுத்தேர்வைப் பொருத்தவரையில், அகமதிப்பீட்டுக்கு 20 மதிப்பெண். தியரி தேர்வுக்கு 80 மதிப்பெண் என மொத்தம் 100 மதிப்பெண். மாணவர்கள் பொதுத்தேர்வில் தியரியிலும் அகமதிப்பீட்டிலும் தனித்தனியே குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் (33 சதவீதம்) பெற வேண்டும். ஆனால், தற்போது, 10-ம் வகுப்புக்கு நீண்ட இடைவெளிக்குப் பிறகு மீண்டும் பொதுத்தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளதால், அதை கருத்தில்கொண்டு புதிதாக இந்த ஆண்டு தேர்வெழுதும் மாணவர்களுக்கு மட்டும் தேர்ச்சிமுறையில் சிபிஎஸ்இ சலுகை அளித்துள்ளது. அதன்படி, மாணவர்கள் தியரி தேர்விலும், அகமதிப்பீட்டிலும் தனித்தனியே குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண் பெற வேண்டிய கட்டாயமில்லை. இரண்டிலும் சேர்த்து ஒட்டுமொத்தமாக தேர்ச்சி மதிப்பெண்ணை பெற்றாலே போதும். இந்த சலுகை தொழிற்கல்வி பாடங்களுக்கு பொருந்தாது. இந்த தேர்ச்சி மதிப்பெண் சலுகை இந்த ஒரு ஆண்டு மட்டுமே நடைமுறைப்படுத்தப்படும் என அனைத்து சிபிஎஸ்இ பள்ளிகளுக்கும் உத்தரவு அனுப்பப்பட்டுள்ளது. சிபிஎஸ்இ 10-ம் வகுப்பு பொதுத்தேர்வு மார்ச் 5-ம் தேதி தொடங்கி ஏப்ரல் 4-ம் தேதி முடிவடைகிறது என்பது குறிப்பிடத் தக்கது.