வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் படிக்க நீட் தேர்வு அவசியம்: மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் | ரஷ்யா, உக்ரைன், அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாடுகளில் எம்பிபிஎஸ் மருத்துவம் பயில்வதற்கு ‘நீட்’ தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம் என மத்திய சுகாதார அமைச்சகம் விளக்கம் அளித்துள்ளது. இந்தியாவில் எம்பிபிஎஸ், பிடிஎஸ் பயில விரும்பும் மாணவர்களுக்கு ‘நீட்’ எனப்படும் நுழைவுத் தேர்வு கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் கடந்த பிப்ரவரி 9-ல் இந்திய மருத்துவ கவுன்சில் இதழில் வெளியான அறிவிப்பில், மருத்துவக் கல்வியை வெளிநாடுகளில் பயிலும் மாணவர்களுக்கும் ‘நீட்’ தேர்வு கட்டாயம் என குறிப்பிடப்பட்டிருந்தது. இது தொடர்பாக வெளிநாடுகளில் மருத்துவம் பயின்று வரும் மாணவர்கள் பலரும் மத்திய சுகாதார அமைச்சகத்திடம் சந்தேகம் எழுப்பி வந்தனர். எம்பிபிஎஸ் படிப்புக்கு மட்டுமா அல்லது எம்டி, எம்எஸ் போன்ற உயர் கல்விக்கும் நீட் அவசியமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இதற்கு விளக்கம் அளிக்கும் வகையில் மத்திய அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கையில், வெளிநாடுகளில் இளநிலை மருத்துவம்(எம்பிபிஎஸ்) பயில விரும்பும் இந்திய மாணவர்கள் அனைவரும் 2018 மே முதல் ‘நீட்’ தேர்வில் தகுதி பெறுவது அவசியம். இந்திய மருத்துவ கவுன்சில் சான்றிதழ் பெற்று ஏற்கெனவே வெளிநாடுகளில் பயின்று வரும் மருத்துவ மாணவர்களுக்கு நீட் தேர்வு அவசியமில்லை என்று கூறப்பட்டுள்ளது.நீட் தேர்வில் மொத்த மதிப்பெண் 220-ல் 108 பெறும் மாணவர்கள் மருத்துவம் படிக்க தகுதி பெறுகின்றனர். இனி இந்த மதிப்பெண் பெறுவோர் மட்டுமே வெளிநாடு சென்று படிக்க முடியும். இந்த ஆண்டு நீட் தேர்வு மே 6-ல் நடைபெறுகிறது. இதற்கு விண்ணப்பிக்க மார்ச் 9 கடைசி நாளாகும். வெளிநாடுகளில் மருத்துவம் படிக்கும் மாணவர்கள் இந்தியாவில் மேற்படிப்பு மற்றும் தொழில்புரிவதற்கு ‘ஸ்கிரீனிங் டெஸ்ட்’ எனும் திறனாய்வுத் தேர்வு நடத்தப்படுகிறது. அதில் எந்த மாற்றமும் செய்யப்படவில்லை.தேசிய மருத்துவ கவுன்சிலுக்கு மாற்றாக ‘தேசிய மருத்துவ ஆணையம்’ அமைப்பதற்கான மசோதா நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்பட்டுள்ளது. இதில் வெளிநாட்டில் பயின்ற மாணவர்கள் மட்டுமின்றி உள்நாட்டில் படித்தவர்களுக்கும் ‘எக்சிட் டெஸ்ட்’ என்ற பெயரில் திறனாய்வு தேர்வு நடத்த பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
Related Stories
September 20, 2023
April 16, 2023