தேசிய கல்வி ஆராய்ச்சி பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் சென்னை ஐகோர்ட்டு உத்தரவு | தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் பாடத்திட்டத்தை பின்பற்றாத சி.பி.எஸ்.இ. பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. சென்னை ஐகோர்ட்டில் வக்கீல் புருஷோத்தமன் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:- சி.பி.எஸ்.இ. பாடத்திட்டத்தை பின்பற்றும் தனியார் பள்ளிகள் முதல் வகுப்பில் 8 பாடங்களைப் பயிற்றுவிக்கின்றன. ஆனால் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (என்.சி.இ.ஆர்.டி.) பாடத்திட்டத்தின்படி முதல் வகுப்பில் 3 பாடங்களே பயிற்றுவிக்கப்படுகிறது. சி.பி.எஸ்.இ. பள்ளிகள் என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்றுவது இல்லை. லாபநோக்கில் தனியார் புத்தக நிறுவனங்கள் 4 மடங்கு அதிகமான விலைக்கு விற்பனை செய்யும் புத்தகங்களையே சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களிடம் திணிக்கின்றன. இதனால் குழந்தைகள் மனதளவில் பாதிக்கப்படுகின்றனர். எனவே என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை பின்பற்ற சி.பி.எஸ்.இ. நிர்வாகத்துக்கு உத்தரவிட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டிருந்தது. இந்த மனுவை விசாரித்த நீதிபதி கிருபாகரன் பிறப்பித்த இடைக்கால உத்தரவில் கூறியிருப்பதாவது:- என்.சி.இ.ஆர்.டி. பரிந்துரைப்படி முதலாம் வகுப்பு மாணவர்களுக்கு தாய்மொழியுடன், ஆங்கிலம், கணிதம் மட்டுமே போதிக்கப்பட வேண்டும். பெரும்பாலான சி.பி.எஸ்.இ. பள்ளிகள் மாணவர்களின் வயதுக்கேற்ற கல்வியை புகட்டுவதில்லை. மழலைப்பருவத்தில் மாணவர்களுக்கு கல்வி ஒரு சுமையாக இருக்கக்கூடாது. என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டத்தை மட்டுமே கடைபிடிக்க வேண்டும் என்று சி.பி.எஸ்.இ. நிர்வாகமும் ஏற்கனவே பள்ளிகளை எச்சரித்துள்ளது. இது போதாது. முறையாக ஆய்வு செய்து நடவடிக்கையை கடுமையாக்க வேண்டும். தேவைப்பட்டால் அந்த பள்ளிகளின் அங்கீகாரத்தை ரத்துசெய்ய வேண்டும். எனவே, அனைத்து சி.பி.எஸ்.இ. பள்ளிகளிலும் அதிகாரிகள் திடீர் ஆய்வு மேற்கொண்டு என்.சி.இ.ஆர்.டி. பாடத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படுகிறதா? என்பதைக் கண்டறிந்து தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும். இதுதொடர்பாக சி.பி.எஸ்.இ. பதில் அளிக்க வேண்டும். விசாரணை ஜனவரி 10-ந் தேதிக்கு தள்ளிவைக்கப்படுகிறது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.