ஜூன் 3-ம் தேதி ஜிப்மர் நுழைவுத்தேர்வு நாளை முதல் விண்ணப்பிக்கலாம் | புதுச்சேரியில் உள்ள ஜிப்மர் மருத்துவக்கல்லூரி. ஜிப்மர் எம்பிபிஎஸ் நுழைவுத்தேர்வுக்கு நாளை முதல் ஏப்ரல் 13-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் ஜூன் 3-ம் தேதி நுழைவுத்தேர்வு நடக்கிறது. புதுச்சேரியில் மத்திய அரசு நிறுவனமான ஜிப்மர் மருத்துவக்கல்லூரியில் 200 எம்பிபிஎஸ் படிப்புகளுக்கான இடங்கள் உள்ளன. இவ்விடங்கள் ஆண்டுதோறும் நுழைவுத்தேர்வு மூலம் நிரப்பப்படுகின்றன. வரும் கல்வியாண்டுக்கான நுழைவுத்தேர்வு வரும் ஜூன் 3-ம் தேதி காலை, மாலை என இரு பிரிவுகளாக நடக்கிறது. எம்பிபிஎஸ் படிப்புக்கான விண்ணப்பங்களை ஆன்லைன் (www.jipmer.puducherry.gov.in) மூலமே விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பங்கள் பதிவு வரும் 7-ம் தேதி காலை 11 மணிக்கு தொடங்குகிறது. வரும் ஏப்ரல் 13-ம் தேதி வரை ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். மே 21-ம் தேதி முதல் ஹால் டிக்கெட்டை தரவிறக்கம் செய்து கொள்ளலாம். மொத்தமுள்ள 200 இடங்களில் புதுச்சேரி ஜிப்மருக்கு 150 இடங்களும் காரைக்கால் ஜிப்மருக்கு 50 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன. புதுச்சேரி, சென்னை, ஐதராபாத், திருவனந்தபுரம், பெங்களூர் உட்பட 75 நகரங்களில் 120 மையங்களில் ஜூன் 3-ம் தேதி நுழைவு தேர்வு நடக்கிறது. ஆன்லைன் மூலமே தேர்வு எழுத முடியும். 800 மதிப்பெண்களுக்கு தேர்வு நடக்கும். அதில் வெற்றிபெறுவோர் நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவார்கள். மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். ஒரு கேள்விக்கு 4 மதிப்பெண்கள் வழங்கப்படும். தேர்வு நேரம் இரண்டரை மணி நேரம் என்று ஜிப்மர் தரப்பில் தெரிவித்தனர். எவ்வளவு இடங்கள்? புதுவை ஜிப்மரில் உள்ள 150 இடங்களில் 40 இடங்கள் புதுவை மாநிலத்துக்கு ஒதுக்கப்படும். மற்றவை அகில இந்திய ஒதுக்கீடு ஆகும். காரைக்கால் ஜிப்மரில் உள்ள 50 இடங்களில் புதுவை மாநிலத்துக்கு 14 இடங்களும், மற்றவை அகில இந்திய ஒதுக்கீடாகவும் இருக்கும். மொத்தம் 54 இடங்கள் புதுச்சேரிக்கு ஒதுக்கப்படும். பொதுப்பிரிவு – 74, ஓபிசி – 37, எஸ்சி – 20, எஸ்டி – 9, புதுவை மாநில ஒதுக்கீட்டில் பொதுப்பிரிவு – 31, ஓபிசி – 13, எஸ்சி – 6, எஸ்டி – 4, வெளிநாடு வாழ்வு இந்தியர் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு 6 இடங்கள் என 200 இடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.
Related Stories
April 5, 2024
February 20, 2024