
பள்ளிகளில் கரும்பலகைக்கு பதிலாக “ஸ்மார்ட் போர்டு’கள் அறிமுகப்படுத்தப்பட இருப்பதாக மத்திய மனிதவள மேம்பாட்டுத் துறை இணையமைச்சர் உபேந்திர குஷ்வாகா தெரிவித்துள்ளார். ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டு மூலம் மாணவர்களுக்கு கற்பிக்கும் முறை எளிமையாகவும், நவீனமாகவும் இருப்பதுடன், இந்த ஸ்மார்ட் டிஜிட்டல் போர்டுகள் மூலம் பள்ளிகள் அனைத்தும் மின்னணுமுறையில் இணைக்கப்படும். இதனால், அங்கு கற்பிக்கப்படும் பாடங்களை எளிதாக கண்காணிக்கவும் முடியும். பிடிஐ செய்தி நிறுவனத்துக்கு பேட்டியளித்த உபேந்திர குஷ்வாகா மேலும் கூறியதாவது: பள்ளிகளில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஸ்மார்ட் போர்டுகள் அறிமுகப்படுத்தப்பட இருக்கின்றன. இதன் முதல்கட்டமாக 25 கேந்திர வித்யாலயா பள்ளிகளுக்கு முன்னோடித் திட்டமாக “டேப்லெட்’கள் அளிக்கப்படவுள்ளன. இதன் தொடர்ச்சியாக “ஸ்மார்ட் போர்டு’கள் நிறுவப்படும். இதற்கு மத்திய இடைநிலைக் கல்வி வாரியம் (சிபிஎஸ்இ) ஏற்கெனவே ஒப்புதல் அளித்துவிட்டது. சுமார் 60 ஆண்டுகளுக்கு முன்பு அனைத்துப் பள்ளிகளிலும் கரும்பலகை வைத்து பாடம் கற்பிப்பதை மத்திய அரசு ஒரு செயல்திட்டமாக முன்னெடுத்து நடத்தியது. இப்போது, அதே பாணியில் “ஸ்மார்ட் போர்டு’ திட்டம் செயல்படுத்தப்பட இருக்கிறது. ஆனால், இத்திட்டத்துக்கு அதிக பணம் செலவாகும். எனினும், மத்திய மாநில அரசுகள் மட்டுமல்லாது, மாநகராட்சி, நகராட்சி உள்ளிட்ட உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்தும். பெரிய தொழில் நிறுவனங்களின் சமூக பொறுப்புணர்வு நிதியில் இருந்தும் நிதி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது.