
தமிழகத்தில், அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில் வேலைக்காக பதிவு செய்திருப்போர் எண்ணிக்கை, நான்கு மாதங்களில் 4.13 லட்சம் அதிகரித்துள்ளது.
அரசு வேலைவாய்ப்பு அலுவலகங்களில், பிப்., 28 வரை 63 லட்சத்து 63 ஆயிரத்து 122 பேர் வேலைக்காக பதிவு செய்து காத்திருந்தனர். ஜூன், 30ம் தேதி நிலவரப்படி 67 லட்சத்து 76 ஆயிரத்து 945 பேர் வேலைக்காக பதிவு செய்து உள்ளனர். நான்கு மாதங்களில், நான்கு லட்சத்து 13 ஆயிரத்து 823 பேர் கூடுதலாக பதிவு செய்துள்ளனர்.
தற்போது, வேலைக்காக பதிவு செய்துள்ளவர்களில் 14.01 லட்சம் பேர் 18 வயதுக்கு உட்பட்ட பள்ளி மாணவர்கள்; 16.49 லட்சம் பேர் 19 – 23 வயது வரை உள்ள, கல்லுாரி மாணவர்கள்; 24 – 35 வயது வரை உள்ளோர், 24.88 லட்சம் பேர். மேலும், 36 – 57 வயது வரையான பதிவுதாரர்கள் 12.26 லட்சம் பேரும், 58 வயதுக்கு மேற்பட்டோர், 10 ஆயிரத்து 907 பேரும் உள்ளனர்.மாற்றுத் திறனாளி பதிவுதாரர்களாக, 45 ஆயிரத்து 993 பெண்கள் உட்பட, ஒரு லட்சத்து, 36 ஆயிரத்து 515 பேர் உள்ளனர்.
வேலைவாய்ப்பு அலுவலகங்களில் பதிவு செய்தோரில் 2.83 லட்சம் பேர் மட்டும், பத்தாம் வகுப்புக்கும் குறைவாக தேர்ச்சி பெற்றவர்கள். இளநிலை சட்டம் படித்த 1,719 பேர்; மருத்துவம் படித்த 690 பேர்; வேளாண் பொறியியல் படித்த 271 பேர்; கால்நடை மருத்துவம் படித்த 929 பேர், தங்கள் பெயரை பதிவு செய்துள்ளனர். அதேபோல், முதுகலை சட்டம் படித்த 165 பேர், முதுகலை கால்நடை மருத்துவம் 167 பேர்; முதுகலை வேளாண் பொறியியல் 14 பேர்; முதுகலை மருத்துவம் 726 பேர் பதிவு செய்துள்ளனர்.