5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு வைப்பது இடைநிற்றலை அதிகரிக்கும் என்று ஆர்வலர்கள் கொந்தளிக்கின்றனர்.கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் படி 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களைக் கட்டாயம் தேர்ச்சி பெற வைக்க வேண்டும்
. இதனால் மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு வைக்கும் நடைமுறையை மத்திய அரசு கொண்டுவர இருக்கிறது. இதற்கான சட்ட மசோதா மாநிலங்களவையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
இந்தநிலையில், 5 மற்றும் 8-ம் வகுப்பு மாணவர்களுக்குப் பொதுத்தேர்வு நடத்தப்பட்டால் அது மாணவர்களை உளவியல் ரீதியாக பாதிப்பதுடன், இடைநிற்றல்எண்ணிக்கையையும் கணிசமாக உயர்த்திவிடும் என்று ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கிறார்கள்.
இதுகுறித்து ம.தி.மு.க. இளைஞரணிச் செயலாளர் வே.ஈஸ்வரனிடம் பேசினோம். அவர் கூறுகையில், “ 10 மற்றும் 12 ஆகிய வகுப்புகளுக்குப் பொதுத்தேர்வுகள் நடத்தப்பட்ட நிலையில், சமீபத்தில் 11-ம் வகுப்பிற்கும் பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது. அதற்கு அடிப்படையான காரணம் ஒன்று இருக்கிறது. ஆனால், மத்திய அரசு தற்போது5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கும் பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்த முயல்கிறது. இதனால், அதிகம் பாதிக்கப்படுவது கிராமப்புற மாணவர்கள்தான்சி.பி.எஸ்.இ. மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்களும் 8-ம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சி அளிக்கப்பட்டே வருகின்றனர். கட்டாயத் தேர்ச்சியால் கல்வித் தரம் குறைகிறது என்றால், அந்த மாணவர்களின் கல்வித் தரம் பாதிக்கப்படாமல் இருப்பது ஏன் என்ற கேள்வி இயல்பாகவே எழுகிறது. எனவே, 8-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களை ஃபெயில் செய்வது அவர்களைப் பாதிக்கவேசெய்யும். அதிலும், குறிப்பாகக் கிராமப்புற மாணவர்களின் குடும்பச் சூழலையும் இது பாதிக்கும் நிலை ஏற்படும். அவர்கள் அனைவரும் பொருளாதார ரீதியாகவோ அல்லது மற்ற சூழல்கள் ரீதியாகவோ ஒரே மாதிரியாக இருப்பதில்லை. இதனால் அவர்களுக்குப் புதிதாக ஓர் அழுத்தம் ஏற்படவே செய்யும்.
இந்தப் புதிய திட்டத்தால் மாணவர்கள் படிக்கவே லாயக்கற்றவர்கள் என்ற முத்திரை குத்தப்பட்டு, வேறு வேலைகளுக்கு அனுப்பப்படும் நிலை உருவாகும்.பொதுத்தேர்வுமுறை கொண்டுவரப்படுவதில் பிரச்னை இல்லை. ஆனால், மாணவர்களை ஃபெயில் செய்வதிலேயே பிரச்னைதொடங்குகிறது. ஒருவேளை தேர்வு வைத்து மாணவர்கள் குறைவான மதிப்பெண் எடுத்தால், அதற்காக ஆசிரியர்கள், கல்வி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்கலாம். தரமான கல்விச் சூழலை உருவாக்காத அரசு, மாணவர்களை பலிகடா ஆக்குவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது. 5-ம் வகுப்புப் பயிலும் மாணவர் ஒருவர் தேர்வில் தேர்ச்சி பெறவில்லை என்றால், சரியான பயிற்றுவிப்பு முறை இல்லை, சரியான ஆசிரியர்கள் இல்லை என்பதே. ஆனால், அதற்காக மாணவர்களைக் குறைகூற முடியாது. அந்த மாணவன் குறைவான மதிப்பெண்கள் எடுப்பது புறச்சூழல் பாதிப்புகளால் மட்டுமே; மாறாக அந்த மாணவனின் அறிவுத் திறன் காரணமாக அல்ல என்பதை நாம் புரிந்துகொள்ள வேண்டும்.
5-ம் வகுப்பு பொதுத்தேர்வுக்கு மாணவர்களை 3 அல்லது 4-ம் வகுப்புகளிலிருந்தே பெற்றோர்கள் தயார் செய்யத் தொடங்கிவிடுவார்கள். இதனால் மாணவர்களின் வெளியுலகத் தொடர்பு முற்றிலுமாகக் குறைந்து பாடப்புத்தகங்களிலேயே மூழ்க நேரிடும். வயதுக்கு மீறிஅதிகப்படியான விஷயங்களை அவர்களின் மூளைக்குள் திணிப்பதால், அவர்களுக்கு மன அழுத்தம் அதிகரிக்கவும்வாய்ப்புகள் அதிகம். ஏற்கெனவே பள்ளி மாணவர்கள் பாடப்புத்தகங்கள் தவிர, செய்தித்தாள் உள்ளிட்டவைகளை வாசிப்பது குறைந்துவரும் நிலையில், இது அந்த பாதிப்பை மேலும் அதிகப்படுத்தும். அதேபோல், விளையாட்டு உள்ளிட்ட உடல் ரீதியான செயல்பாடுகள் குறைந்துபோய், சரியான வளர்ச்சியை அவர்களால் எட்ட முடியாமல் போய்விடும் ஆபத்தும் இருக்கிறது. இது மாணவர்களின் ஒட்டுமொத்த ஒருங்கிணைந்த வளர்ச்சிக்கு மிகப்பெரும் தடையாக இருக்கும் என்பதில் மாற்றுக்கருத்தில்லை.
மத்திய அரசு நடத்தும் நவோதயா பள்ளிகளில் 6-ம் வகுப்புச் சேர்க்கைக்காக மாவட்ட வாரியாக நுழைவுத் தேர்வுகள் ஏற்கெனவே நடைபெற்று வருகின்றன. இந்தத் தேர்வில் தேர்ச்சி பெற்றால் மட்டுமே நவோதயா பள்ளிகளில் 6-ம் வகுப்பில் சேர முடியும். இதனால் குறிப்பிட்ட அந்த மாவட்டத்தில் நன்றாகப் படிக்கும் மாணவர்கள் நவோதயா பள்ளிகளில் சேர்க்கப்படுகிறார்கள். அவர்களை வைத்து நவோதயா பள்ளிகளின் செயல்பாடு சிறப்பானதாக இருக்கிறது என்று மதிப்பிட முடியுமா?. அதேபோல், நாடு முழுவதும் நடத்தப்படும் போட்டித்தேர்வுகளுக்கு மாணவர்களைத் தயார்படுத்துவதில் தேசிய அளவில் ராஜஸ்தான் மாநிலத்தில் கோட்டா முன்னிலை வகிக்கிறது. ஐ.ஐ.டி. உள்ளிட்ட பெரிய கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் பேராசிரியர்களைக் கொண்டு மாணவர்களுக்குப் பயிற்சி அளிக்கப்படுகிறது. தேசிய அளவிலான போட்டித் தேர்வுகளில் கோட்டா பகுதியில் உள்ள மையங்களில் பயின்ற மாணவர்கள் சிறப்பாகச் செயல்படுகின்றனர்.
இதை வைத்து ராஜஸ்தான் மாநிலம் கல்வியில் முன்னேறி இருப்பதாக ஒரு முடிவுக்கு வர முடியுமா? ராஜஸ்தான் மாநிலத்தில் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் குறைவு.அதேபோல், கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின்படி, தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இட ஒதுக்கீடு அளித்து மாணவர்களுக்கு இலவச கல்வி அளிக்க வேண்டும் என்ற நடைமுறை இருக்கிறது. 5 மற்றும் 8 ஆகிய வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடைமுறைப்படுத்தப்பட்டால், தனியார் பள்ளிகளில் பயிலும் மாணவர்கள் 5-ம் வகுப்பைத் தாண்ட முடியாமல், அந்த வாய்ப்பைப் பயன்படுத்த முடியாமல் போய்விடும்” என்றார் ஆதங்கத்துடன்.