அரையாண்டு தேர்வு எழுதும் மாணவர்களுக்கு முக்கிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.
தமிழ்நாட்டில் அரசு பள்ளி மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகள் உள்பட தமிழ்நாடு பாடத்திட்டத்தின் கீழ் இயங்கும் அனைத்து பள்ளிகளுக்கும் அரையாண்டு தேர்வு நடைபெறவுள்ளது. குறிப்பாக 10, 11 மற்றும் 12-ம் வகுப்பு மாணவர்கள் பொதுத் தேர்வை எதிர்கொள்ளவுள்ள நிலையில் அரையாண்டு தேர்வு முக்கியமானதாக உள்ளது.
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவிபெறும் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வு டிசம்பர் மாதம் தொடங்கப்படும். தமிழக பள்ளிக் கல்வி துறையின் திருத்தப்பட்ட நாள்காட்டியின்படி, அரையாண்டு தேர்வு டிசம்பர் 16 ஆம் தேதி முதல் தொடங்கி டிசம்பர் 23 ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. அரையாண்டு தேர்விற்கான மாணவர்களை வேகமாக தங்களை தயார்படுத்திக் கொண்டு வருகின்றனர்.
தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் பருமழை தீவிரம் அடைந்து தொடர் மழை பொழிவு இருந்துவருகிறது. இதன் காரணமாக பல்வேறு மாவட்டங்களிலும் கடந்த தினங்களில் விடுமுறை அறிவிக்கப்பட்டது. அப்படியும் மாணவர்கள், டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள அரையாண்டு தேர்வை எதிர்கொள்ள தயாராகி வருகின்றனர்.
10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டு எழுத்து தேர்வுக்கு முன்பாக எப்போதும் செய்முறைத் தேர்வு நடைபெறும். அந்த வகையில், இந்த ஆண்டிற்கான 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு தேதிகள் வெளியாகியுள்ளன.
தேர்வு தேதி குறித்து வெளியாகியுள்ள அறிவிப்பில், அரசு மற்றும் அரசு உதவி பெறும் உயர்/மேல்நிலைப்பள்ளிகளில் பயிலும் 10,11 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு அரையாண்டுத் தேர்விற்கான செய்முறைத் தேர்வுகளை வரும் டிசம்பர் மாதம் 2ம் தேதி துவங்கி 6ம் தேதிக்குள் முடிக்க தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.