
தமிழ்நாட்டில் பள்ளி இறுதி வகுப்பான 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வுகள் இன்று தொடங்கி, மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. முதல் நாளான இன்று தமிழ் உள்ளிட்ட மொழிப்பாடத் தேர்வுகள் நடைபெறுகின்றன. இந்த தேர்வை 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18 ஆயிரத்து 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என மொத்தம் 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுத இருக்கின்றனர். இதற்காக மாநிலம் முழுவதும் 3 ஆயிரத்து 316 தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டு, 45 ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் கண்காணிப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
மேலும், 4 ஆயிரத்து 800க்கும் மேற்பட்ட பறக்கும் படைகளுடன் தேர்வுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் நிலையில் இருப்பதாக தேர்வுத்துறை தெரிவித்துள்ளது. இதனிடையே, பொதுத்தேர்வு நடைபெறும் நாட்களில் தடையின்றி மின்சாரம் வழங்கிட மின்சாரத்துறையிடம் அமைச்சர் அன்பில் மகேஷ் வலியுறுத்தியுள்ளார். தேர்வு மைய வளாகத்தில் செல்போன் தடை செய்யப்பட்டுள்ள நிலையில், தடையை மீறி தேர்வு மையத்தில் செல்போன் பயன்படுத்தும் ஆசிரியர்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
மாணவர்களைப் பொறுத்தவரையில், விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற மை கொண்டு மட்டுமே எழுத வேண்டும் என்றும் எக்காரணம் கொண்டும் கலர் பென்சில், பேனா பயன்படுத்தக் கூடாது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விடைத்தாள்களில் எவ்வித சிறப்பு குறியீடு, தேர்வெண், பெயர் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.
ஆள்மாறாட்டம், துண்டுத்தாள் அல்லது பிற மாணவர்களைப் பார்த்து எழுதுதல், தேர்வு அதிகாரியிடம் முறைகேடாக நடந்து கொள்ளுதல், விடைத்தாள் மாற்றம் செய்தல் ஆகிய ஒழுங்கீன செயல்களில் மாணவர்கள் ஈடுபட்டால் 3 ஆண்டுகள் தடை அல்லது நிரந்தரமாக தேர்வெழுத தடை விதிக்கப்படும். மேலும், ஒழுங்கீன செயல்களை ஊக்குவிக்க பள்ளி நிர்வாகம் முயன்றால் அதன் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் எனவும் தேர்வுகள் இயக்ககம் எச்சரிக்கை விடுத்துள்ளது.
பிளஸ் டூ தேர்வு எழுதும் மாணவர்களுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், துணை முதலமைச்சர் உதயநிதி உள்ளிட்டோர் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஆளுநர் ஆர்.என்.ரவி மாணவர்களுக்கு வெளியிட்ட வாழ்த்துச் செய்தியில், தெளிவான சிந்தனையுடன் கேள்விகளை எதிர்கொள்ள வேண்டும் எனவும், மாணவர்களுக்கு பெற்றோர் மற்றும் ஆசிரியர்கள் உறுதுணையாக இருக்கவேண்டும் எனவும் அறிவுறுத்தியுள்ளார்.