
ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்கள் அனைவரையும் தேர்ச்சி செய்ய வேண்டும் என்ற நடைமுறை தற்போது அமலில் உள்ளது. இந்த நிலையில் ஐந்து மற்றும் 8ஆம் வகுப்பு மாணவர்களுக்கான தேர்ச்சி முறையில் மத்திய அரசு மாற்றம் கொண்டு வரவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
அதன்படி ஐந்து மற்றும் 8ஆம் வகுப்பு மாணவ, மாணவிகள் ஆண்டு இறுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது கட்டாயமாக்கப்படுகிறது. தேர்வில் தோல்வி அடைந்தால், இரண்டு மாதங்களில் மறு தேர்வு எழுத வாய்ப்பு வழங்கப்படும். அதிலும் தேர்ச்சி பெறவில்லை என்றால் அந்த மாணவர், ஏற்கெனவே படித்த வகுப்பில் மீண்டும் ஒருவருடம் பயில வேண்டும். இதேநேரம், தேர்ச்சி பெறவில்லை என்பதைக் காரணம் காட்டி, பள்ளி நிர்வாகம் மாணவர்களை வெளியேற்றக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கட்டாய தேர்ச்சி நடைமுறை, மத்திய கல்வி நிறுவனங்களான கேந்திர வித்யாலயா, நவோதயா வித்யாலயா பள்ளிகளுக்கு பொருந்தும் எனவும் இதனை நடைமுறைப்படுத்துவது குறித்த முடிவை அந்தந்த மாநிலங்கள் எடுத்துக் கொள்ளலாம் எனவும் மத்தியக் கல்வித் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.