TNPSC குரூப்-2 முதன்மை, நேர்முக தேர்வு மதிப்பெண்கள் வெளியீடு | குரூப்-2 முதன்மை தேர்வு, நேர்முக தேர்வில் மதிப்பெண்கள் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் வெளியிடப்பட்டன. சைதை துரைசாமியின் மனித நேய மையத்தில் படித்த மாணவிகள் இதில் சாதனை படைத்துள்ளனர். குரூப்-2 தேர்வு வருவாய்த்துறை உதவியாளர், தொழிலாளர் உதவி ஆய்வாளர், இளநிலை வேலைவாய்ப்பு அதிகாரி, வணிக வரித்துறை அதிகாரி, கூட்டுறவு முதுநிலை ஆய்வாளர், உள்ளாட்சி மற்றும் நிதி தணிக்கையாளர் உள்ளிட்ட 1,250 பணிகளுக்கு தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் குரூப்-2 தேர்வை அறிவித்தது. இதற்கான முதல் நிலை தேர்வு 2015-ம் ஆண்டு நடத்தப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டது. பின்னர் முதன்மை தேர்வு 2016-ம் ஆண்டு நடந்தது. இந்த தேர்வை 15 ஆயிரம் பேர் எழுதினார்கள். இந்த முடிவும் வெளியிடப்பட்டது. இதையடுத்து கடந்த மாதம் 22-ந் தேதி முதல் இம்மாதம் 19-ந் தேதி வரை நேர்முக தேர்வு நடத்தப்பட்டது. முதன்மை தேர்வில் 2 ஆயிரத்து 500 பேர் எடுத்த மதிப்பெண்களும், நேர்முக தேர்வில் அவர்கள் வாங்கிய மதிப்பெண்களும் அரசு பணியாளர் தேர்வாணைய இணையதளத்தில் (www.tnpsc.gov.in ) வெளியிடப்பட்டது. இவர்களில் 1,250 பேர் தேர்ந்து எடுக்கப்பட உள்ளனர்.