
TRB ANNUAL PLANNER 2018 – ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியீடு இறுதிகட்ட தயாரிப்பு பணிகள் தீவிரம் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் வருடாந்திர தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படுகிறது. அரசு பள்ளி ஆசிரியர்கள், உதவி தொடக்கக்கல்வி அதிகாரிகள், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர்கள், அரசு பொறியியல் கல்லூரி உதவி பேராசிரியர்கள், மாவட்ட ஆசிரியர் பயிற்சி நிறுவன விரிவுரையாளர்கள் உள்ளிட்டோர் ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் தேர்வு செய்யப்படுகின்றனர். ஓராண்டில் ஆசிரியர் பதவிகளில் நிரப்பப்படும் காலியிடங்கள் எண்ணிக்கை, அதற்கான அறிவிப்பு வரும் நாள், எழுத்துத் தேர்வு மற்றும் தேர்வு முடிவு நாள் உள்ளிட்ட விவரங்கள் அடங்கிய வருடாந்திர தேர்வு கால அட்டவணை (Annual Planner) வெளியிடும் முறையை ஆசிரியர் தேர்வு வாரியம் கடந்த ஆண்டு அறிமுகப்படுத்தியது. இதன்மூலம், ஆசிரியர், விரிவுரையாளர், உதவி பேராசிரியர் போன்ற பணிகளில் சேர விரும்புவோர் தேர்வுக்கு முன்கூட்டியே திட்டமிட்டு படிக்க வசதியாக இருக்கும். அந்த வகையில், முதுகலை பட்டதாரி ஆசிரியர், அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர், சிறப்பு ஆசிரியர், வேளாண் ஆசிரியர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய பதவிகளில் 6,390 காலியிடங்களை நிரப்பும் வகையில் கடந்த ஆண்டு தேர்வு கால அட்டவணை வெளியிடப்பட்டது. அதன்படி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் பணிக்கு மட்டும் தேர்வு நடத்தப்பட்டு ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அரசு பாலிடெக்னிக் விரிவுரையாளர் தேர்வு, மதிப்பெண் முறைகேடு காரணமாக சமீபத்தில் ரத்து செய்யப்பட்டது. சிறப்பு ஆசிரியர் தேர்வு கடந்த ஆண்டு ஆகஸ்ட்டில் நடத்தப்பட்டது. தேர்வு வாரிய அறிவிப்பின்படி, கடந்த நவம்பரில் முடிவுகள் வெளியிடப்பட்டிருக்க வேண்டும். 3 மாதங்கள் ஆகியும் இன்னும் முடிவு வெளியிடப்படவில்லை. வேளாண் ஆசிரியர், அரசு கலை அறிவியல் கல்லூரி உதவி பேராசிரியர், உதவி தொடக்கக்கல்வி அதிகாரி ஆகிய தேர்வுகளுக்கு இன்னும் அறிவிப்பே வெளியிடப்படவில்லை. தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் (டிஎன்பிஎஸ்சி) இந்த ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணையை ஜனவரியில் வெளியிட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தேர்வு கால அட்டவணை ஒரு வாரத்தில் வெளியிடப்படும் என்று பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் செங்கோட்டையன் கடந்த ஜனவரியில் கூறினார். ஆனால், இன்னும் அட்டவணை வெளியிடப்பட வில்லை. இதனால், ஆசிரியர் வேலையை எதிர்பார்த்து காத்திருப்பவர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர். ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தகவல் அலுவலகம் சென்னை டிபிஐ வளாகத்தில் உள்ளது. சிறப்பு ஆசிரியர் தேர்வு முடிவு எப்போது வெளியாகும், வருடாந்திர தேர்வுக்கால அட்டவணை எப்போது வெளியிடப்படும் என்பதை அறிந்துகொள்ள தினமும் ஏராளமானோர் இங்கு வந்து விசாரித்துவிட்டு செல்கின்றனர். இதுகுறித்து ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ”2018-ம் ஆண்டுக்கான தேர்வு கால அட்டவணை தயாரிப்பு பணிகள் இறுதிகட்டத்தை எட்டியுள்ளன. டிஎன்பிஎஸ்சி, யுபிஎஸ்சி உள்ளிட்ட இதர தேர்வாணையங்களின் தேர்வு நாள் குறித்த விவரங்களை ஆய்வு செய்துவருகிறோம். வருடாந்திர தேர்வு கால அட்டவணை விரைவில் வெளியிடப்படும்” என்றனர். கடந்த ஆண்டு அட்டவணையில் இடம்பெற்ற உதவி தொடக்கக்கல்வி அதிகாரி, வேளாண் ஆசிரியர், அரசு கலை கல்லூரி உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கான தேர்வுகள் புதிய அட்டவணையில் முதலில் இடம்பெறும் என தெரிகிறது.