பள்ளி ஆசிரியர் நியமனங்களுக்கான தகுதி தேர்வை மே மாதம் நடத்த திட்டம் வருடாந்திர தேர்வுக்கால அட்டவணையில் பல தகவல்கள் இடம்பெறும் நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. நீதிமன்ற வழக்குகள் காரணமாக 2013 முதல் 2016 வரை, 3 ஆண்டு காலமாக தகுதித்தேர்வு நடத்தப்படவில்லை. வழக்குகள் முடிவடைந்த நிலையில், 3 ஆண்டு இடைவெளிக்குப் பிறகு கடந்த 2017-ம் ஆண்டு தகுதித்தேர்வு நடத்தப்பட்டது. தகுதித்தேர்வு தேர்ச்சி, 7 ஆண்டு காலம் செல்லத்தக்கது. இதுவரையில் நடத்தப்பட்ட தகுதித்தேர்வுகளில் தேர்ச்சி பெற்று ஏறத்தாழ 94,000 பேர் அரசு வேலையை எதிர்பார்த்து காத்திருக்கிறார்கள். தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் ஆசிரியர் நியமனம் தகுதித்தேர்வு மதிப்பெண் மட்டுமே அடிப்படையாகக் கொண்டு நடைபெறுவதில்லை. இதற்கு வெயிட்டேஜ் மதிப்பெண் முறை பின்பற்றப்படுகிறது. தகுதித்தேர்வு மதிப்பெண், பிளஸ் 2 தேர்வு மதிப்பெண், பட்டப் படிப்பு மற்றும் பிஎட் படிப்பு மதிப்பெண் (இடைநிலை ஆசிரியர்கள் எனில் இடைநிலை ஆசிரியர் பயிற்சி படிப்பு) என ஒவ்வொரு தகுதிக்கும் குறிப்பிட்ட வெயிட்டேஜ் மதிப்பெண் அளிக்கப்பட்டு மெரிட் பட்டியல் தயாரிக்கப்படுகிறது. அதன் அடிப்படையில்தான் பட்டதாரி ஆசிரியர்களும், இடைநிலை ஆசிரியர்களும் தேர்வுசெய்யப்படுகிறார்கள். தகுதித்தேர்வுக்கு 60 சதவீதம் வெயிட்டேஜ் அளிக்கப்படுகிறது. ஒருவர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்றாலும் மீண்டும் தேர்வெழுதிய மதிப்பெண்ணை உயர்த்திக்கொள்ள முடியும். 20 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிகளிலும், கல்லூரிகளிலும் தேர்வுகளில் அதிக மதிப்பெண் தரப்படுவதில்லை. ஆனால், அண்மைக்காலமாக எஸ்எஸ்எல்சி, பிளஸ் 2 தேர்வுகளிலும் கல்லூரிகளிலும் தாராளமாக மதிப்பெண் அளிக்கப்படுவதால் பழைய மாணவர்கள் வெயிட்டேஜ் முறையால் பாதிக்கப்படுவதாகவும், எனவே, இந்த முறையை கைவிட்டுவிட்டு தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் மட்டுமே ஆசிரியர்களைத் தேர்வு செய்யவேண்டும் என்ற கோரிக்கை தொடர்ந்து வலியுறுத்தப்பட்டு வந்தது. இதுதொடர்பாக ஆய்வுசெய்ய பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலர் தலைமையில் ஒரு குழுவும் அமைக்கப்பட்டது. அந்தக் குழுவின் அறிக்கை அரசிடம் சமர்ப்பிக்கப்பட்டு பரிந்துரைகள் ஆய்வுசெய்யப்பட்டன. இந்த நிலையில், ஜனவரி 2-வது வாரத்தில் பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் தலைமையில் நடந்த உயர்நிலைக் குழுக் கூட்டத்தில், வெயிட்டேஜ் முறை அடிப்படையிலேயே தொடர்ந்து பட்டதாரி, இடைநிலை ஆசிரியர்களை நியமிப்பது என்றும், ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்துவது என்றும் முடிவுசெய்யப்பட்டது. நடப்பு ஆண்டுக்கான தகுதித்தேர்வை மே மாதம் நடத்த ஆசிரியர் தேர்வு வாரியம் திட்டமிட்டுள்ளது. உயர்நிலைக் குழுக் கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின்படி இனிமேல் ஆண்டுதோறும் தகுதித்தேர்வு நடத்தவும், மே மாதம் நடத்த உத்தேசித்து இருப்பதாகவும் இதுதொடர்பான விவரம் விரைவில் வெளியிடப்படவுள்ள வருடாந்திர அட்டவணையில் இடம்பெறும் எனவும் ஆசிரியர் தேர்வு வாரிய உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.