
இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தகவல் | இந்த ஆண்டு கூடுதலாக 515 தேர்வு மையங்கள் அமைக்கப்படும் என்று பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். பள்ளிக்கல்வி துறை அமைச்சர் செங்கோட்டையன், கல்வி அலுவலர்களுடன் சென்னை கோட்டூர்புரத்தில் உள்ள அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் ஆலோசனை நடத்தினார். அப்போது கூட்டத்தில் அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது:- ஒவ்வொரு ஆண்டும் கூடுதலாக தேர்வு மையங்கள் அமைக்கப்படுவது வழக்கம். அந்தவகையில் இந்த ஆண்டு 515 தேர்வு மையங்கள் கூடுதலாக அமைக்கப்பட்டுள்ளன. 100 மாணவர்கள் இருந்தாலே அங்கு ஒரு தேர்வு மையம் அமைக்கலாம் என்று திட்டமிட்டு இருக்கிறோம். ஆண்டு தோறும் தேர்வு மையங்களில் தேர்வு எழுதும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. அரசு பள்ளியில் மாணவர்களின் எண்ணிக்கை குறைவுக்கு என்ன காரணம் என்று பலர் கேட்கிறார்கள். மக்களின் ஜனத்தொகை குறைந்து கொண்டு இருக்கிறது. ஜனத்தொகை குறைய குறைய மாணவர்களின் எண்ணிக்கையும் குறைந்து கொண்டே இருக்கிறது. புதிய பாடத்திட்டம் பாடத்திட்ட மாற்றம் 12 ஆண்டுகளுக்கு பிறகு கொண்டு வரப்பட்டு இருக்கிறது. இதுதொடர்பான கருத்துகளை 15 நாட்கள் தெரிவிக்க காலஅவகாசம் கொடுக்கப்பட்டு இருந்தது. சிறந்த கல்வியாளர்கள், பெற்றோர், கல்வி நிறுவனங்களை சேர்ந்தவர்கள் பல்வேறு கருத்துகளை வெளிப்படுத்தினார்கள். மொத்தம் 2 ஆயிரத்து 318 கடிதம் வந்தது. பலர் வரவேற்று எழுதி இருந்தார்கள்.3 ஆண்டு காலத்தில் புதிய பாடத்திட்டத்தை அமல்படுத்த திட்டமிட்டு இருந்தோம். வரும் கல்வி ஆண்டில் 1, 6, 9, 11 ஆகிய வகுப்புகளுக்கு புதிய பாடமாற்றம் கொண்டு வரப்படும். அதற்கு பிறகு பிற வகுப்புகளுக்கு புதிய பாடத்திட்டம் அமல்படுத்தப்படும். 2 ஆண்டுகளுக்குள் அதை செய்து முடிக்க விரைந்து முயற்சி எடுத்து வருகிறோம். சி.பி.எஸ்.இ.-யை மிஞ்சும் அளவுக்கு கல்வித்தரம் இந்த பாடத்திட்டத்தில் இருக்கும். தேர்வு மையங்களை சரியாக கண்காணிக்க வேண்டும். சிறிய தவறுகள் கூட நடந்துவிடக்கூடாது. மைனாரிட்டி என்ற சொல்லக்கூடிய பாடங்களை படிக்கக்கூடிய பல்வேறு மொழிகளை பேசும் மாணவர்களுக்கு சரியான முறையில் வினாத்தாள், விடைத்தாள் சென்றடையும். எங்கும் தவறு நடக்கவில்லை என்பதை வெளிப்படுத்தும் விதமாக அனைத்து தேர்வு மையங்களில் இருக்கும் வகுப்பறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்த திட்டமிட்டு இருக்கிறோம். அடுத்த ஆண்டு முதல் இதை நடைமுறைப்படுத்த இருக்கிறோம். பள்ளிகளில் பழைய கட்டிடங்கள் இருந்தால், அதை உரிய அதிகாரிகளிடம் தெரிவித்து, சரி செய்து கொள்ள வேண்டும். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ஏழைகள் இல்லாத தமிழ்நாட்டை உருவாக்க வேண்டும் என்று கூறினார். அப்படி உருவாக வேண்டும் என்றால், அதற்கு கல்வி அவசியம். அதை நாங்கள் செய்து வருகிறோம். ஸ்மார்ட் கார்டு வழங்கும் திட்டத்தை கொண்டு வர இருக்கிறோம். அதுவந்தால் மாணவர்களின் எண்ணிக்கை எவ்வளவு? ஆசிரியர்கள் எங்கு கூடுதலாக பணியில் இருக்கிறார்கள்? என்பதை தெரிந்து கொள்ள முடியும். நாங்கள் நடத்திய ஆய்வில் 4 ஆயிரத்து 842 ஆசிரியர்கள் தென்மாவட்டத்தில் கூடுதலாக பணியில் இருக்கிறார்கள். ‘ஸ்மார்ட் கிளாஸ்’ தொடங்குவதற்கும் முயற்சி எடுத்து வருகிறோம். கட்டணமில்லா அழைப்பு உதவி மையம் மிக விரைவில் தொடங்கப்பட உள்ளது. மாணவர்களும், பெற்றோர்களும் தொடர்பு கொள்ளும் வகையில் இது அமையும். இவ்வாறு அவர் பேசினார். இதையடுத்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- தனியார் பள்ளிகளுக்கும், அரசு பள்ளிகளுக்கும் வேறுபாடு இருக்கிறது. அதன் அடிப்படையில் அரசு பள்ளியின் பாடத்திட்டத்தில் மாற்றங்களை கொண்டு வருகிறோம். அடுத்த ஆண்டில் இருந்து தனியார் பள்ளிகளை காட்டிலும் அரசு பள்ளிகளில் மாணவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கும். அரசு பள்ளிகளில் ஒழுங்கீனமான செயல் நடப்பதாக புகார்கள் வந்து இருக்கிறது என்று கூறினார்கள். அப்படி குற்றச்சாட்டு வராமல் இருக்க ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் உரிய பயிற்சி அளிக்கப்படும். மோடி எழுதிய புத்தகத்தை பா.ஜ.க. மாநில தலைவர் டாக்டர் தமிழிசை சவுந்தரராஜன் என்னிடம் வழங்கினார். அதை பாடப்புத்தகத்தில் சேர்க்கவில்லை. இவ்வாறு அவர் கூறினார்.