ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு 6000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் 1200 வகுப்பறைகளும் நடப்பாண்டிலேயே கூடுதலாக கட்டப்படும் என்று தமிழ்நாடு முதல்வர் மு.க ஸ்டாலின் அறிவித்தார்.
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் இன்று சட்டமன்றப் பேரவையில், சட்டப்பேரவை விதி 110-ன் கீழ் பல்வேறு துறைகளில் புதிய திட்டங்களை அறிவித்தார்.
கடந்த ஓராண்டு காலத்தில், பள்ளிக் கல்வித் துறை மகத்தான பல திட்டங்களை முன்னெடுத்துள்ளதாக தெரிவித்த அவர், இந்தியாவில் உள்ள அனைத்து மாநிலங்களுக்கும் எடுத்துகாட்டாக திகழும் வண்ணம் காலை உணவுத் திட்டம், இல்லம் தேடி கல்வி, எண்ணும் எழுத்தும் திட்டம், மாதிரிப் பள்ளிகள், நான் முதல்வன், தகைசால் பள்ளிகள் என தமிழக அரசு பல திட்டங்களைத் தீட்டி சிறப்பாக செயல்படுத்தி வருவதாக தெரிவித்தார்.
இந்தச் சூழலில், பள்ளிகளின் கட்டமைப்புகளை வலுப்படுத்துவதற்கென அரசுப் பள்ளிகளுக்கு சுமார் 26 ஆயிரம் புதிய வகுப்பறைகளும், 7500 கி.மீட்டர் சுற்றுச்சுவரும், பராமரிப்பு பணிகளுக்கென சுமார் 2,200 கோடி ரூபாய் நிதியென மொத்தம் சுமார் 12,300 கோடி ரூபாய் நிதி தேவை என்பது கண்டறியப்பட்டு அவற்றை படிப்படியாக ஏற்படுத்தி தர பேராசிரியர் அன்பழகன் கல்வி மேம்பாட்டுத் திட்டம் என அறிவிக்கப்பட்டதாக தெரிவித்தார்.
அத்திட்டத்தின்படி, நடப்பாண்டில் சுமார் 1430 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு ஆயத்த வேலைகள் நடைபெற்று வருகின்றன. தரமான கல்வியை நமது அரசுப் பள்ளிகள் வழங்கி வருவதால், கடந்த 2 ஆண்டுகளில் சுமார் 15 லட்சம் மாணவர்கள் அரசுப் பள்ளிகளில் கூடுதலாக சேர்ந்துள்ளனர். எனவே அதிகரித்துவரும் மாணவர்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப புதிய வகுப்பறைகளுக்கான தேவைகள் உயர்ந்துள்ளதால், கூடுதலான வகுப்பறைகள் கட்ட திட்டமிடப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.
இதன் அடிப்படையில், ஊராட்சி ஒன்றிய தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளுக்கு சுமார் ரூ.800 கோடி மதிப்பீட்டில் 6000 புதிய வகுப்பறைகளும், உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் சுமார் 280 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 1200 வகுப்பறைகளுமென மொத்தம் 1050 கோடி ரூபாய் மதிப்பீட்டில், 7200 வகுப்பறைகள் நடப்பாண்டிலேயே கூடுதலாக கட்டப்படும்.
பள்ளிகளின் பராமரிப்பு பணிகளுக்கென நடப்பாண்டில், ஏற்கெனவே ஒதுக்கப்பட்டுள்ள சுமார் 150 கோடி ரூபாய் நிதியுடன் சேர்த்து தற்போது கூடுதலாக ரூ.115 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு அரசுப் பள்ளிகளை உரிய முறையில் பராமரிக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார்.