தசம எண்களில் பிளஸ் 2 மதிப்பெண்கள் கணக்கிடப்பட்டுள்ளன.
தமிழகத்தில் கரோனா பரவல் காரணமாக, பிளஸ் 2 தேர்வு ரத்து செய்யப்பட்டு, மாணவர்கள் அனைவரும் தேர்ச்சி செய்யப்படுவதாக அரசு அறிவித்தது. இதையடுத்து, 10, 11-ம் வகுப்பு பொதுத் தேர்வில் 70 சதவீதம், பிளஸ் 2 செய்முறைத் தேர்வில் 30 சதவீதம் என்ற விகிதத்தில் மாணவர்களுக்கு இறுதி மதிப்பெண் கணக்கிடப்பட்டது.
மதிப்பெண் கணக்கீட்டுப் பணிகள் முடிந்துவிட்ட நிலையில், 8.06 லட்சம் பள்ளி மாணவ, மாணவிகளுக்கான பிளஸ் 2 பொதுத் தேர்வு முடிவுகள் இன்று காலை (ஜூலை 19) வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டது.
பிளஸ் 2 மாணவ, மாணவிகள் www.tnresults.nic.in, www.dge1.tn.nic.in, www.dge2.tn.nic.in, www.dge.tn.gov.in ஆகிய இணையதளங்களில் தங்கள் பதிவெண், பிறந்த தேதியை உள்ளீடு செய்து மதிப்பெண்களுடன் கூடிய தேர்வு முடிவுகளை அறிந்து கொள்ளலாம் எனவும், மாணவர்களின் செல்போன் எண்ணுக்கு குறுந்தகவலாகவும் தேர்வு முடிவுகள் அனுப்பப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டது.
அதன்படி, இன்று காலை 11 மணி அளவில், நுங்கம்பாக்கத்தில் உள்ள டிபிஐ அலுவலகத்தில், பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி பிளஸ் 2 மதிப்பெண்களை வெளியிட்டார். அப்போது, பள்ளிக் கல்வித்துறை ஆணையர் நந்தகுமார், தேர்வுகள் துறை இயக்குநர் உஷா ராணி உள்ளிட்டோர் உடனிருந்தனர்.
பிளஸ் 2 பொதுத்தேர்வு மதிப்பெண்கள் இதுவரை 80, 70 என்பதுபோல முழுமையான மதிப்பெண்களாக வழங்கப்பட்டன. தற்போதைய கணக்கீட்டின்படி பெரும்பாலும் இறுதி மதிப்பெண்கள் 70.11 என்பதுபோல தசம எண்களுடன் சேர்ந்து வரும். மாணவர்கள் உயர்கல்வியில் சேரும்போது பாதிப்பு அடைவதைத் தவிர்க்க மதிப்பெண் சான்றிதழில் தசம விகிதங்கள் அப்படியே குறிப்பிடும் வகையில், புதிய நடைமுறை அமல்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
உதாரணமாக, பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் ஒரு மாணவரின் இறுதி மதிப்பெண் கூட்டுத்தொகை 78.29 என்று வந்தால் அது முழு மதிப்பெண்ணாக 79 என மாற்றப்படாமல் 78.29 என்று தசம எண்ணாகவே மதிப்பெண் சான்றிதழில் குறிப்பிடப்படும். இந்தப் புதிய நடைமுறை நடப்பு ஆண்டு அமலுக்கு வருகிறது. கட் ஆஃப் மதிப்பெண் கணக்கீட்டின்போது இதுபெரிதும் உதவியாக இருக்கும் எனக் கல்வியாளர்கள் தெரிவித்துள்ளனர்.