
தமிழ்நாட்டில் ஆசிரியர் தகுதித் தேர்வை (TET) ஆசிரியர் தேர்வு வாரியம் நடத்தி வருகிறது. இந்நிலையில், 2025-ம் ஆண்டுக்கான டெட் தேர்வை அறிவிப்பு ஆகஸ்ட் மாதம் வெளியாகி, விண்ணப்பங்கள் பெறப்பட்டு வருகிறது. இத்தேர்வை எழுத விரும்புகிறவர்கள் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க செப்டம்பர் 8 வரை அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில், செப்டம்பர் 10 வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு (TN TET 2025)
ஆசிரியர் தகுதித் தேர்வு சுருக்கமாக டெட் தேர்வு என்பது 1 முதல் 8-ம் வகுப்பு வரை கற்பிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் மற்றும் பட்டதாரி ஆசிரியர்களுக்கு தகுதித் தேர்வாக நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் இத்தேர்வை ஆசிரியர் தேர்வு வாரியம் (TRB) நடத்தி வருகிறது. இத்தேர்வு 2 தாள்கள் கொண்டு நடைபெறும். முதல் தாள் 1 முதல் 5-ம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்க தகுதித்தாளாகவும், 2ஆம் தாள் 6 முதல் 8ஆம் வகுப்பு வரை உள்ள மாணவர்களுக்கு கற்பிக்கவும் நடத்தப்படுகிறது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு இத்தேர்வு நடைபெறாத நிலையில், தொடர்ந்து கோரிக்கையின் மூலம் இந்தாண்டு நடத்த அறிவிப்பு வெளியாகியது.
2024-ம் ஆண்டு தேர்வு நடைபெறும் என எதிர்பார்த்த நிலையில், பல்வேறு காரணங்களால் அறிவிப்பு வெளியாகவில்லை. இந்தாண்டுக்கான டிஆர்பி ஆண்டு அட்டவணையில் இடம்பெறாதபோதிலும், ஆகஸ்ட் 11-ம் தேதி அறிவிப்பு வெளியிட்டு விண்ணப்பங்கள் பெறப்படுவதாக அறிவிக்கப்பட்டது.
யாரெல்லாம் டெட் தேர்வை எழுதலாம்?
- இந்தாண்டு ஜூலை 1-ம் தேதியின்படி, 18 வயது நிறைந்தவர்கள் இத்தேர்வை எழுத தகுதியானவர்கள். உச்ச வரம்பு கிடையாது.
- தொடக்கக்கல்வி டிப்ளமோ, இளங்கலை பட்டப்படிப்பு, சிறப்பு கல்வியியல் டிப்ளமோ இறுதி ஆண்டு மாணவர்கள் மற்றும் முடித்தவர்கள் தாள் – I எழுதலாம்.
- பட்டப்படிப்பு உடன் தொடக்கக்கல்வி டிப்ளமோ, B.Ed முடித்தவர்கள் தாள் – II தேர்வை எழுதலாம்.
டெட் தேர்வு முறை
டெட் தேர்வு மொத்தம் மொழி தாளுடன் மொத்தம் 150 கேள்விகள் கொண்டு 3 மணி நேரம் நடைபெறும். கேள்விகள் கொள்குறி வகையில் (MCQ) அமையும். ஓஎம்ஆர் தாள் மூலம் தேர்வு நடத்தப்படும். இதில் குறைந்தபட்ச தேர்ச்சி மதிப்பெண்களாக 60 சதவீத மதிப்பெண்கள் பெற வேண்டும். எஸ்சி, பிசி, எம்பிசி பிரிவினர் 55 சதவீதமும், எஸ்டி 40 சதவீதமும் எடுக்க வேண்டும். இதனிடையே இந்த தேர்ச்சி சதவீதத்தை குறைக்க வேண்டும் என தேர்வர்கள் கோரிக்கை வைக்கின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
ஆசிரியர் பணிக்கான தகுதியான டெட் தேர்வை எழுத விரும்புகிறவர்கள் https://trb.tn.gov.in/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக விண்ணப்பிக்க செப்டம்பர் 10 வரை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. ஆசிரியர்களின் கோரிக்கையை ஏற்று விண்ணப்பிக்க கூடுதலாக 2 நாட்கள் வழங்கப்படுகிறது. இதற்கான முதல் தாள் தேர்வு நவம்பர் 15 தேதியும், இரண்டாம் தாள் தேர்வு நவம்பர் 16 தேதியும் நடைபெறும் என ஏற்கனவே தெரிவிக்கப்பட்டது.