
திருநெல்வேலி மாவட்டம் மனோன்மணியம் சுந்தரனார் பல்கலைக்கழகத்தில் பல்வேறு பாடப்பிரிவுகளில் முனைவர் (பிஎச்டி) பட்டப்படிப்பு பதிவுக்கான தகுதி தேர்வுக்கு விண்ணப்பங்கள் இணையதளத்தில் வரவேற்கப்படுகின்றன.
முனைவர் பட்ட படிப்பிற்கு இணையதளத்தில் பதிவு செய்யும் போது முதுநிலை தேர்ச்சி பெற்றவர்கள் இறுதி மதிப்பெண் பட்டியல், சாதி சான்றிதழையும் மற்றும் சிறப்பு பிரிவிற்கான சான்றிதழ் சமர்பிக்க வேண்டும். தகுதி தேர்வில் 70 சதவீதம் மதிப்பெண்ணும், முதுநிலை படிப்பில் 30 சதவீதம் மதிப்பெண்ணும் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். தமிழக அரசின் இடஒதுக்கீடு கொள்கையின் அடிப்படையில் தகுதி பட்டியல் தயாரிக்கப்பட்டு கலந்தாய்வு, நேர்முகத்தேர்வுக்கு அழைக்கப்படுவர்.
இது தொடர்பான பாடப்பிரிவுகள் அடிப்படை தகுதிகள், கட்டண விவரங்கள், தகுதி தேர்வு தேதி மற்றும் அனுமதி நெறிமுறைகள் பல்கலைக்கழக www.msuniv.ac.in , http://www.msuniv.ac.in/ என்ற இணையதள முகவரியில் கொடுக்கப்பட்டுள்ளது. ஜேஆர்எப், யுஜிசி-நெட், யுஜிசிசி எஸ்ஐஅர் நெட், செட், சிஎம்ஆர்எப் கேட், சிஇஇடி தேர்ச்சி பெற்றவர்களுக்கு இந்த தகுதி தேர்வில் இருந்து விலக்கு அளிக்கப்படுகிறது. ஆனால் அவர்கள் முனைவர் பட்டப்படிப்பு பயில கலந்தாய்வுக்கு பதிவு செய்ய வேண்டும். பதிவு கட்டணம் ரூ.3,000 ஆகும்.
தகுதி தேர்வு எழுத விருப்பம் உள்ளவர்கள் பல்கலைக்கழக ஆராய்ச்சி இணையதளத்தில் உள்ள ஆராய்ச்சி பிரிவு பகுதி இணையதள விண்ணப்பம் மூலம் விண்ணப்பிக்கலாம். தகுதி தேர்வுக்கு கட்டண தொகை ரூ.2 ஆயிரம் ஆகும். நுழைவுத்தேர்வுக்கான விண்ணப்பம் இணையதளத்தில் வெளியாகி உள்ளது.
30.9.25 அன்று இணையதள வாயில் மூடப்படும். தகுதி தேர்வு 12.10.25 அன்று நடைபெறுகிறது. கலந்தாய்வு பதிவு செய்வதற்கான இணையதள விண்ணப்பம் வாயில் 15.9.25 அன்று திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் விபரங்களுக்கு பல்கலைக்கழக இணையதளத்தில் தெரிந்து கொள்ளலாம் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.