
2025ம் ஆண்டுக்கான 10ம் வகுப்பு தேர்வு பிப்ரவரி மாதம் 10ம் தேதி முதல் மார்ச் 18ம் தேதி வரையிலும், 12ம் வகுப்பு பொதுத் தேர்வு பிப்ரவரி 15ம் தேதி முதல் ஏப்ரல் 4ம் தேதி வரையிலும் நடைபெற உள்ளது.
10, 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு புதிய கட்டுப்பாடுகளை சிபிஎஸ்இ கல்வி வாரியம் அறிவித்துள்ளது. பள்ளி கல்வியில் இருந்து விடுபட்டுள்ள கோடிக்கணக்கான மாணவர்களை மீண்டும் உள்கொண்டு வர வேண்டும் என்று தேசிய கல்விக் கொள்கை பரிந்துரைத்த நிலையில், சிபிஎஸ்இ வாரியத்தின் தற்போதைய அறிவிப்பு பல்வேறு விவாதங்களை எழுப்பியுள்ளது.
இந்தியாவில் 6-8ம் வகுப்புகளுக்கான ஒட்டுமொத்த பதிவுச்சேர்க்கை வீதம் (Gross Enrollment Rate) 90.9% ஆக உள்ளது. இருப்பினும், 9-10 மற்றும் 11-12 வகுப்புகளுக்கு முறையே 79.3% மற்றும் 56. 5% ஆக மட்டுமே உள்ளது. அதாவது, கட்டாய கல்வி காரணமாக 8ம் வகுப்பு வரை செல்லும் மாணவர்கள் பிந்தைய வகுப்புகளின் போது பள்ளியை விட்டு வெளியேறிவிடுகின்றனர்.
2017-18-இல் தேசிய வகைமாதிரி அளவை அலுவலகத்தின் (NSSO) 75-ஆவது கணக்கெடுப்பின் படி, 6 முதல் 17 வயது வரையுள்ள குழுப்பிரிவில் பள்ளியை விட்டு விலகிய குழந்தைகளின் எண்ணிக்கை 3.22 கோடி ஆகும். விடுபட்ட மாணவர்கலை மீண்டும் பள்ளிக்குள் கொண்டு வர தேசியக் கல்விக் கொள்கை பல்வேறு முன்மொழிவுகளை பரிந்துரைத்தது.
CBSE Announcement : இந்நிலையில், முழுமையான கற்றல் அனுபவம், மாணவர்களின் நலம் ஆகையவற்றை மனதில் கொண்டு கல்விக் கட்டமைப்பிலும் சில அடிப்படை மாற்றங்களை அறிவித்துள்ளது. அதன்படி, 10ம் வகுப்பு என்பது 2 ஆண்டுகள் கொண்ட நிகழ்ச்சித் திட்டமாக மாற்றியமைக்கப்படுவதாக வாரியம் தெரிவித்துள்ளது. அதவாது, 9,10ம் வகுப்பு ஒருங்கிணைப்படும். இந்த இரண்டுமே 10ம் வகுப்பு கற்றலின் அடிப்படையாக கொள்ளப்படும். இந்த இரண்டிலும் தேர்ச்சி பெற்றால் மட்டுமே 10ம் வகுப்பு தேர்ச்சியாக ஏற்றுக் கொள்ளப்படும். அதேபோன்று, 11,12ம் வகுப்பு ஒருங்கிணைக்கப்பட்டு 12ம் வகுப்பு கற்றலுக்குமான அடிப்படையாக கொள்ளப்படும்.
எனவே, வரும் காலங்களில் 10, 12ம் வகுப்பு வாரியத் தேர்வு என்பது ஒற்றை ஆண்டுத் தேர்வாக மட்டும் இல்லாமல், இரண்டாண்டு கல்வித் திட்டமாக இருக்கும். தொடர்ச்சியாக 2 ஆண்டுகளில் வகுப்புத் தேர்வு, செய் தொழில் பயிற்சி (Projects) தேர்வில் பெற்ற மதிப்பெண் அடிப்படையில் வாரியத் தேர்வு மதிப்பெண் தீர்மானிக்கப்படும். எனவே, பள்ளிக்கு வருகை தராத மாணவர்கள் வாரியத் தேர்வுக்கு தகுதி பெறாத இடத்துக்கு தள்ளப்படுகின்றனர்.
வருகைப்பதிவேடு: 10,12ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் பள்ளியில் சேர்க்கப்பட்ட மாணவர்கள் முறையாக பள்ளிக்கு வருவதை உறுதி செய்ய சிபிஎஸ்இ கல்வி வாரியம் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. அதில் ஒரு பகுதியாக, 10,12ம் வகுப்பு வாரியத் தேர்வில் கலந்து கொள்வதற்கு 75% வருகை பதிவை கட்டாயமாக்கியுள்ளது
மருத்துவ அவசர நிலை, தேசிய அளவிலான விளையாட்டு மற்றும் கலை நிகழ்ச்சிகளில் பங்கேற்பதற்காக மட்டும் 25% விடுப்பை எடுத்துக் கொள்ள அனுமதி அளிக்கப்படுவதாக தெரிவித்துள்ளது. எந்த காரண காரியமின்றி வருகை தராத மாணவர்கள் தேர்வுக்கு தகுதி பெற மாட்டார்கள் என்றும் திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.
வாரியத் தேர்வுக்கு 75% வருகை பதிவு கட்டாயம் என்பது ஏற்கனவே நடைமுறையில் இருந்து வருகிறது. இருப்பினும், 2 ஆண்டுகள் தொடர் கண்காணிப்பின் அடிப்படையில் மாணவரின் கற்றல் திறன் நிரணயிக்கப்பட இருப்பதால், இது மாணவர்கள் கூடுதல் சுமைகளை ஏற்படுத்தியுள்ளது.