
2025-26 கல்வி ஆண்டில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகளில் பி.எட் படிப்பிற்கு ஜூன் 20 தேதி முதலும், எம்.எட் படிப்பிற்கு ஆகஸ்ட் 11 முதலும் விண்ணப்பம் தொடங்கி நடைபெற்றது. முதல் சுற்று கலந்தாய்வு முடிவில் நிரப்பப்படாமல் இருக்கும் இடங்களுக்கு தற்போது ஆர்வமுள்ளவர்கள் விண்ணப்பிக்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. செப்டம்பர் 30-ம் தேதி வரை https://www.tngasa.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
B.Ed மாணவர் சேர்க்கை 2025
தமிழ்நாட்டில் 7 அரசு கல்வியியல் கல்லூரிகள், 14 அரசு உதவிபெறும் கல்வியியல் கல்லூரிகள் என மொத்தம் 21 கல்லூரிகளில் மொத்தம் 2,040 இடங்கள் உள்ளன.
தமிழ், ஆங்கிலம், கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், வரலாறு, புவியியல், கணினி அறிவியல், பொருளாதாரம், வீட்டு அறிவியல் மற்றும் வணிகம் உள்ளிட்ட பாடப்பிரிவுகளில் பி.எட் படிப்பு வழங்கப்படுகிறது.
இளங்கலை பட்டப்படிப்பு முடித்தவர்கள் பி.எட் படிப்பிற்கு விண்ணப்பிக்கலாம். ஆசிரியர் தகுதி பெற பி.எடி படிப்பு அவசியமாக உள்ளது.
அதன்படி, 2025-26 கல்வி ஆண்டிற்கான விண்ணப்பம் ஜூன் 20 முதல் தொடங்கு ஜூலை 21 வரை பெறப்பட்டது. இதற்கான தரவரிசை வெளியாகி, முதல் சுற்று கலந்தாய்வு முடிவடைந்தது. இதன் பிறகு 2 அரசு கல்லூரிகளில் 49 இடங்கள் மற்றும் 12 அரசு உதவி பெறும் கல்லூரிகளில் 530 இடங்கள் என மொத்தம் 579 இடங்கள் இன்னும் நிராப்பப்படாமல் உள்ளன.
மீண்டும் விண்ணப்பிக்க வாய்ப்பு
இதனைக் கருத்தில் கொண்டு இதுவரை விண்ணப்பிக்க இயலாதவர்கள் அரசு மற்றும் அரசு உதவி பெறும் கல்வியியல் கல்லூரிகளில் உள்ள இடங்களில் சேர்ந்து பயிலும் வகையில் மீண்டும் ஆன்லைன் வழியாக விண்ணப்பம் தொடங்கப்படுவதாக உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி.செழியன் தெரிவித்துள்ளார். அதன்படி, இன்று (15.09.2025) முதல் 30.09.2025 வரை https://www.tngasa.in/ என்ற இணையதளம் வழியாக விண்ணப்பிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இது தொடர்பான விவரங்களுக்கு https://www.lwiase.ac.in/ என்ற இணையதளத்தில் அறிந்துகொள்ளலாம்.
M.Ed மாணவர் சேர்க்கை 2025
தமிழ்நாஅட்டில் 6 அரசு கல்வியியல் கல்லூரிகளில் எம்.எட் படிப்பு வழங்கப்படுகிறது. இதற்கு மொத்தம் 300 இடங்கள் உள்ளன. இந்த கல்வி ஆண்டிற்கான சேர்க்கை ஆகஸ்ட் 11 முதல் தொடங்கி நடைபெற்றது.
சென்னை, தஞ்சாவூர், புதுக்கோட்டை, கோயம்புத்தூர், வேலூர் ஆகிய இடங்கள் கல்லூரிகள் உள்ளன. பி.எட் முடித்தவர்கள் எம்.எட் படிப்பில் சேரலாம். முதல் கட்டமாக செப்டம்பர் மாதத்தில் கலந்தாய்வு முடிவடைந்து வகுப்புகள் தொடங்கப்பட்டன. இதில் இன்னும் உள்ள இடங்களுக்கு மாணவர்கள் விண்ணப்பித்து பயிலும் வகையில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எம்.எட் படிப்பில் சேர விரும்புகிறவர்கள் https://med.tngasa.in/ என்ற இணையதளத்தில் செப்டம்பர் 30 வரை விண்ணப்பிக்கலாம்.
பி.எட் மற்றும் எம்.எட் படிக்க விரும்பி இதுவரை விண்ணப்பிக்க இயலாதவர்கள் மற்றும் விண்ணப்பிக்க தவறியவர்கள் இந்த வாய்ப்பைப் பயன்படுத்திகொண்டு அரசு கல்வியியல் கல்லுரிகளில் படிக்கும் வாய்ப்பைப் பெறலாம். மேல் குறிப்பிட்டுள்ள இணையதளத்தில் கல்லூரிகளுக்கான விவரங்கள், பாட வாரியாக தகுதிகள் இடம்பெற்றுள்ளன. விண்ணப்பிக்கும் நபர்களுக்கு ஒருங்கிணைந்த கலந்தாய்வின் மூலம் இடங்கள் ஒதுக்கப்படும்.