தமிழக சட்டசபையில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 110 விதியின் கீழ் வெளியிட்ட அறிவிப்பில் கூறியிருப்பதாவது:- மனவளர்ச்சி குன்றியோர், பார்வைத் திறன் மற்றும் செவித் திறன் குறையுடையோருக்காக செயல்படும் தன்னார்வ தொண்டு நிறுவனங்களில் பணிபுரியும் சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்களின் மதிப்பூதியம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.14 ஆயிரமாக உயர்த்தி வழங்கப்படும். இதன் மூலம் 1,129 சிறப்பு ஆசிரியர்கள் மற்றும் பயிற்சியாளர்கள் பயன் பெறுவர். இதனால், அரசுக்கு ஆண்டொன்றிற்கு ரூ.5 கோடியே 42 லட்சம் செலவு ஏற்படும். மாற்றுத்திறனாளிகளுக்கு சுயவேலைவாய்ப்பு ஏற்படுத்தும் வகையில், ஆவின் நிறுவனத்தின் பால் உற்பத்தி பொருள் விற்பனை மையம் அமைக்க, ஆவின் நிறுவனத்திற்கு செலுத்த வேண்டிய முன்வைப்பு நிதி ரூ.25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். முதற்கட்டமாக 100 பேருக்கு ரூ.25 லட்சம் செலவில் இத்திட்டம் செயல்படுத்தப்படும். மாற்றுத்திறனாளிகள் நலத்துறையின் கீழ் செயல்படும் 301 சிறப்புப் பள்ளிகள் மற்றும் இல்லங்கள் மூலம் 11 ஆயிரத்து 948 மாற்றுத்திறனாளிகள் பயன்பெறுகின்றனர். அவர்களுக்கு தற்போது மாதம் ஒன்றிற்கு வழங்கப்பட்டு வரும் உணவூட்டு மானியம் ரூ.650-ல் இருந்து ரூ.900 ஆக உயர்த்தி வழங்கப்படும். இதனால், அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ.3 கோடியே 15 லட்சம் கூடுதல் செலவு ஏற்படும். இவ்வாறு அவர் கூறினார்.