ஆசிரியர் தகுதித் தேர்வில் இருந்து வெயிட்டேஜ் முறையை ரத்து செய்ய அரசு பரிசீலனை செய்து வருவதாக சட்டசபையில் அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கூறினார். கவன ஈர்ப்பு தீர்மானம் தமிழக சட்டசபையில் நேற்று கேள்வி நேரம் முடிந்ததும், தி.மு.க. உறுப்பினர் தங்கம் தென்னரசு (திருச்சுழி தொகுதி) கவன ஈர்ப்பு தீர்மானம் ஒன்றை கொண்டுவந்தார். ஆசிரியர் தகுதித் தேர்வில், தேர்ச்சி பெற்றவர்களுக்கு பணி வழங்க வேண்டியதன் அவசியம் குறித்து அவர் கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- வெயிட்டேஜ் மதிப்பெண் ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு வழங்கப்படும் தகுதிச்சான்று 7 ஆண்டுகள் வரை செல்லத்தக்கதாகும். ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது ஆசிரியர்களாக நியமனம் பெறுவதற்கான ஒரு தகுதித் தேர்வு மட்டுமே ஆகும். ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மட்டுமே அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியராக பணிபுரிய இயலும். மேலும், ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சுயநிதி பள்ளிகளில் ஆசிரியராக சேர்ந்து பணியாற்றவும் வாய்ப்பு உள்ளது. அரசுப் பள்ளிகளைப் பொறுத்தவரை ஆசிரியர் பணியிடங்களை நிரப்புவது ஆண்டுதோறும் பள்ளிக் கல்வி மற்றும் தொடக்கக் கல்வித் துறையில் ஏற்படும் இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர் காலிப் பணியிட மதிப்பீட்டை கணக்கிட்டு அந்த காலிப்பணியிடங்களுக்கு ஏற்ப, பணிநாடுநர்களது ஆசிரியர் தகுதி தேர்வு மதிப்பெண், தேர்வர்கள் பெற்ற கல்வித் தகுதிக்கான வெயிட்டேஜ் மதிப்பெண் மற்றும் இனசுழற்சி முறை அடிப்படையில் தரவரிசை நிர்ணயிக்கப்பட்டு அதன் அடிப்படையில் ஆசிரியர் நியமனம் மேற்கொள்ளப்படுகிறது. ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் மீண்டும் அடுத்த முறை ஆசிரியர் நியமனத் தேர்வில் கலந்துகொண்டு காலிப்பணியிடங்களுக்கு ஏற்ற வகையில் தரவரிசைப் பட்டியலில் இடம் பெற்றால் மட்டுமே அரசு பள்ளிகளில் நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளது. இவ்வாறு அவர் கூறினார். அரசு பரிசீலனை தொடர்ந்து நடந்த விவாதம் வருமாறு:- தங்கம் தென்னரசு:- ஆசிரியர் பணி நியமனத்தில் வெயிட்டேஜ் முறையை நீக்க வேண்டும். இதனால், பலருக்கு வேலை வாய்ப்பு மறுக்கப்படுகிறது. அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- 2013-ம் ஆண்டு நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில், இடைநிலை ஆசிரியர்கள் 42,724 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 13,881 பேருக்கு பணி வழங்கப்பட்டுவிட்டது. அதேபோல், பட்டதாரி ஆசிரியர்கள் 57,400 பேர் தேர்ச்சி பெற்றனர். அவர்களில், 24,220 பேருக்கு பணி கொடுக்கப்பட்டுவிட்டது. தங்கம் தென்னரசு:- சிறப்பு ஆசிரியர்களுக்கு நடத்தப்பட்ட தேர்வு முடிவுகள் இன்னும் வெளியிடப்படாமல் உள்ளது. அந்தத் தேர்வு எழுதியவர்கள் சென்னையில் போராட்டம் நடத்தி வருகிறார்கள். அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன்:- சிறப்பு ஆசிரியர்கள் தேர்வு முடிவுகள் விரைவில் வெளியிடப்படும். ஆசிரியர் தகுதித் தேர்வில் வெயிட்டேஜ் முறையை ரத்து செய்வது தொடர்பாக அரசு பரிசீலனை செய்து வருகிறது. இவ்வாறு விவாதம் நடந்தது.