
தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ஜன.22 முதல் பிப். 5 வரை விண்ணப்பிக்கலாம்- பிப்.24-ம் தேதி பயனாளிகளுக்கு மானியத் தொகை வழங்கப்படும்- தமிழக அரசின் அம்மா இருசக்கர வாகன திட்டத்துக்கு ஜன.22 முதல் பிப் 5-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த 2016-ம் ஆண்டு அதிமுகவின் தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டபடி, ஆண்டுதோறும் ஒரு லட்சம் மகளிருக்கு அம்மா இருசக்கர வாகன திட்டத்தின்கீழ், வாகனம் வாங்க 50 சதவீதம் அல்லது ரூ.25 ஆயிரம் மானியம் வழங்கப்படும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது. இத்திட்டம், பிப்.24-ம் தேதி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்த தினத்தை முன்னிட்டு, தொடங்கப்படுகிறது. இந்நிலையில், திட்டத்துக்கான பயனாளிகளைத் தேர்வு செய்வதற்கான அடிப்படைப் பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இத்திட்டத்தின்கீழ், கியர் இல்லாத அல்லது தானியங்கி கியர் கொண்ட 125 சிசி திறன் கொண்ட 2018-ம் ஆண்டுக்கான வாகனங்களுக்கு அதன் விலையில் ரூ.25 ஆயிரம் அல்லது 50 சதவீதம் வாகன விலை இவற்றில் எது குறைவோ அது வழங்கப்படும். மீதமுள்ள தொகையை வங்கி, தனியார் நிறுவன கடன் அல்லது ரொக்கமாக செலுத்த வேண்டும். முறை சார்ந்த, முறைசாரா பணியில் உள்ள பெண்கள், கடைகள், இதர நிறுவனங்களில் பணியாற்றும் பெண்கள், சிறு கடைகள் உள்ளிட்ட சுய தொழில் புரியும் பெண்கள், அரசு சார்ந்த, தனியார், சமுதாய அமைப்புகள், ஊராட்சி அளவிலான கூட்டமைப்பு, வறுமை ஒழிப்பு சங்கம், மாவட்ட மக்கள் கற்றல் மையம் உள்ளிட்டவற்றில் பணியாற்றவோர், தினக்கூலி பெறுவோர், ஒப்பந்த ஊழியர்கள், வங்கி ஒருங்கிணைப்பாளர், பெண் வங்கி வழிநடத்துநர்கள், சமூக சுகாதார பெண் ஆர்வலர்கள் உள்ளிட்டோர் இந்த வாகன நிதியுதவியை பெற முடியும். மேலும், 18 முதல் 40 வயதுக்கு உட்பட்டவர்களாகவும், வாகன ஓட்டுநர் உரிமம் வைத்திருப்பவர்களாகவும் இருக்க வேண்டும். ஆண்டு வருமானம் ரூ.2.5 லட்சத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். ஒரு குடும்பத்தில் ஒரு பெண் மட்டுமே இந்தத் திட்டத்தின்கீழ் பயனாளியாக முடியும். மலைப்பகுதியில் வசிப்போர், மகளிரைக் குடும்ப தலைவியாகக் கொண்ட பெண், ஆதரவற்ற மகளிர், விதவை, மாற்றுத்திறனாளி பெண், திருமணமாகாத 35 வயதுக்கு மேற்பட்ட மகளிர், ஆதிதிராவிடர், பழங்குடியினர் மற்றும் திருநங்கைகளுக்கு இத்திட்டத்தில் முன்னுரிமை அளிக்கப்படும். ஆதிதிராவிடர்களுக்கு 21 சதவீதம், பழங்குடியினருக்கு 1 சதவீதம் மற்றும் மாற்றுத்திறனாளி பெண்களுக்கு 4 சதவீதம் ஒதுக்கப்படுகிறது. இதற்கான விண்ணப்பங்கள் நாளை 22-ம் தேதி முதல் ஊராட்சி ஒன்றியம், பேரூராட்சி, நகராட்சி அலுவலகங்களிலும், மாநகராட்சிகளின் மண்டல அலுவலகங்களில் பெறலாம். பிப்.5-ம் தேதி மாலை 5 மணிக்குள் விண்ணப்பத்தை நேரடியாக அளிக்கலாம். பதிவு, விரைவு தபாலிலும் அனுப்பலாம். இத்திட்டத்துக்கான கள ஆய்வு பிப்.10-ம் தேதி நடக்கிறது. பயனாளிகளைத் தேர்வு செய்ய, மாவட்டங்களில் ஆட்சியர் தலைமையிலும், மாநகராட்சிகளில் ஆணையர் தலைமையிலும் தேர்வுக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் பிப்.15-க்குள் பயனாளிகள் பட்டியலைத் தயாரித்து அரசுக்கு அனுப்புவர். பிப்.24-ம் தேதி பயனாளிகளுக்கு வாகனத்துக்கான மானியத் தொகை வழங்கப்படுகிறது.