
அக்டோபர் 1-ம் தேதி முதல் தமிழகம் முழுவதும் 38 அரசு மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமனம் சுகாதாரத் துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தகவல் தமிழகம் முழுவதும் உள்ள 38 அரசு மருத்துவமனைகளில் வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் அவுட்சோர்சிங் முறையில் பணியாளர்கள் நியமிக்கப்படுவார்கள் என சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் தெரிவித்தார். சுகாதாரத் துறை மற்றும் குடும்ப நலத்துறை சார்பில் தூய்மையே சேவை இயக்கத்தை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் சென்னையில் நேற்று தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: அரசு மருத்துவமனைகளில் ஏற்கெனவே 36 மருத்துவமனைகளில் அவுட்சோர்சிங் மூலமாக தூய்மைப் பணிக்காக பணியாளர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். வரும் அக்டோபர் 1-ம் தேதி முதல் மேலும் 38 அரசு மருத்துவமனைகளுக்கு அவுட்சோர்சிங் மூலம் பணியாளர்கள் நியமனம் செய்யப்பட உள்ளனர். இந்த பணியாளர்கள் முழுமையாக பணியில் ஈடுபடும்போது அரசு மருத்துவமனைகளின் சூழல் மேம்படும். எந்த துறையிலும் கிடைக்காத மன நிறைவு மருத்துவத் துறையில் மட்டுமே கிடைக்கும். எனவே, நோயாளிகளிடம் வாழ்த்துப் பெறும் வகையில் அரசு மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் ஊழியர்களின் சேவை இருக்க வேண்டும். தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள், மருத்துவக் கல்லூரி மருத்துவமனை வளாகங்களைப் பொதுமக்கள் விரும்பும் வகையில் தூய்மையாக வைக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. டெங்கு காய்ச்சலை பொறுத்தவரை, 12 சுகாதார மாவட்டங்களில் காய்ச்சல் இருந்தது. அது முழுமையாக கட்டுப்படுத்தப்பட்டுள்ளது. சேலத்தில் ஒரு சில வட்டங்களில் காய்ச்சல் உள்ளது. விரைவில் அங்கேயும் காய்ச்சல் கட்டுப்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். சுகாதாரத் துறை முதன்மை செயலர் ஜெ.ராதாகிருஷ்ணன் பேசும்போது, “தமிழகத்தில் தற்போது பன்றிக்காய்ச்சல் இல்லை. ஆனால், வட மாநிலங்களில் அதன் தாக்கம் உள்ளது. மழைக்காலம் வரும்போது மற்ற காய்ச்சல்களை எதிர்கொள்ள 3 மாதத்துக்கு தேவையான ரூ.90 கோடி மதிப்புள்ள மருந்துகள் மற்றும் தேவையான பிளீச்சிங் பவுடர்கள் அரசிடம் கையிருப்பில் உள்ளன” என்றார். இந்நிகழ்ச்சியில், பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்புத் துறை இயக்குநர் க.குழந்தைசாமி, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநர் ப.பானு, சென்னை மருத்துவக் கல் லூரி மருத்துவமனை முதல்வர் ஆர்.நாராயணபாபு உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.